தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்னும் 2 நாட்களுக்கு மழை இருக்கு.. வானிலை மையம் எச்சரிக்கை

Aadmika
Dec 17, 2023,06:53 PM IST

சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்றும், நாளையும் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது. அதிலும் நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் மிக மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.


சென்னை வானிலை மையம் இன்று வெளியிட்டுள்ள தகவலில், மிச்சாங் புயல் எதிரொலியாக இந்திய பெருக்கடலிலும், அதை ஒட்டி உள்ள தென்மேற்கு வங்கக் கடலிலும், இலங்கையை ஒட்டிய கடல் பகுதியிலும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளது. இதனால் தென் தமிழகம் மற்றும் வடதமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. 




நவம்பர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் வட தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் லேசானது முதல் மிதமானது வரையிலசன மழை பெய்ய வாய்ப்புள்ளது. தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.



ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், சிவகங்கை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. கடல்காற்று 40 முதல் 45 கி.மீ., வேகத்திலும் சில நேரங்களில் 55 கி.மீ., வேகத்திலும் வீசக் கூடும். இதனால் மீனவர்கள் யாரும் நவம்பர் 19 ம் தேதி வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. 

தென் தமிழகம் மற்றும் வட தமிழகத்தில் சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக அதிகமான கனமழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.