19,000 இந்தியர்கள் வங்கதேசத்தில் உள்ளனர்.. தீவிரமாக கண்காணித்து வருகிறோம்.. அமைச்சர் ஜெய்சங்கர்

Su.tha Arivalagan
Aug 06, 2024,06:27 PM IST

டெல்லி: வங்கதேசத்தில் உள்ள 19,000 இந்தியர்களுடனும் தொடர்ந்து நாம் தொடர்பில் இருந்து வருகிறோம். அவர்களில் 9000 பேர் மாணவர்கள் ஆவர் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.


வங்கதேசத்தில் பெரும் அரசியல் குழுப்பம் ஏற்பட்டுள்ளது. பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக வெடித்த கலவரத்தால் அவர் பதவியை ராஜினாமா செய்து விட்டு நாட்டை விட்டு வெளியேறி விட்டார். தற்போதைக்கு இந்தியாவில் தங்கியுள்ள ஷேக் ஹசீனா, விரைவில் இங்கிலாந்தில் அரசியல் புகலிடம் பெற முடிவு செய்துள்ளார்.




இந்த நிலையில் வங்கதேச விவகாரம் தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி எதிர்க்கட்சிகளுக்கு விளக்கினார். அவர்கள் கேட்ட கேள்விகளுக்கும் விளக்கம் அளித்தார். இதைத் தொடர்ந்து மாநிலங்களவையில் இந்த விவகாரம் குறித்து ஜெய்சங்கர் விளக்க அறிக்கையை சமர்ப்பித்தார். அப்போது அவர் பேசுகையில், வங்கதேசத்தில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழலை இந்திய அரசு கூர்ந்து கண்காணித்து வருகிறது. அங்கு 19,000 இந்தியர்கள் வசிக்கிறார்கள். அதில் 9000 பேர் மாணவ, மாணவியர் ஆவர். அவர்களுடன் அரசு தொடர்ந்து தொடர்பில் உள்ளது.


வங்கதேசத்தில் உள்ள இந்திய குடிமக்களின் பாதுகாப்பை அந்த நாடு உறுதி செய்ய வேண்டும். தேவையான பாதுகாப்பை அளிக்க வேண்டும்.  அங்கு சிறுபான்மையினர் தாக்கப்பட்டுள்ளனர். அங்கு சட்டம் ஒழுங்கு மீண்டும் சரியாக வேண்டும். எல்லைப் பகுதிகளில் தீவிரக் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


இந்தியாவில் தற்காலிகமாக தங்குவதற்கு ஷேக் ஹசீனா அனுமதி கோரினார். அவரது கோரிக்கையை ஏற்றே அவரை இந்தியாவுக்குள் அனுமதித்தோம். அவர் இங்கு நிரந்தரமாக தங்குவது குறித்து விண்ணப்பிக்கவில்லை. அப்படி கோரிக்கை வந்தால் பரிசீலிக்கப்படும் என்றார் அமைச்சர் ஜெய்சங்கர்.


இந்தியா- வங்கதேசத்திற்கு இடையே கிட்டத்தட்ட 4096 கிலோமீட்டர் தொலைவுக்கு எல்லைப் பகுதி உள்ளது. அங்கு சிறுபான்மையினரான இந்துக்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் தாக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வருகின்றன. அவை எந்த அளவுக்கு உண்மை என்றும் தெரியவில்லை. ஒரு வேளை அப்படி நடந்தால் சிறுபான்மையின மக்கள் அகதிகளாக இந்தியாவுக்குள் வர வாய்ப்புள்ளது. இதனால் மேற்கு வங்கம், திரிபுரா உள்ளிட்ட மாநில எல்லைப் பகுதிகளில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் மேகாலயாவின் எல்லைப் பகுதியில் 12 மணி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.