புரட்டிப் போட்ட பூகம்பம்.. மேற்கு நோக்கி 6 மீட்டர் நகர்ந்து போய் விட்ட துருக்கி!

Su.tha Arivalagan
Feb 09, 2023,11:07 AM IST
அங்காரா: துருக்கியில் ஏற்பட்ட மிகப் பெரிய நிலநடுக்கம் காரணமாக அந்த நாடு மேற்கு நோக்கி 5 முதல் 6 மீட்டர் வரை நகர்ந்துள்ளதாக நிபுணர்கள்தெரிவித்துள்ளனர்.



துருக்கி, சிரியா ஆகிய நாடுகளில் கடந்த 2 நாட்களாக பலமுறை நிலநடுக்கம் ஏற்பட்டு வரலாறு காணாத சேதத்தை ஏற்படுத்தி விட்டது.  இரு நாடுகளிலும் 11,200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பல்லாயிரம் வீடுகள் அடியோடு நாசமாகி விட்டன. பல லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் கடுமையான நிலநடுக்கம் காரணமாக துருக்கி நாட்டின்  நிலப்பரப்பானது மேற்கு நோக்கி 5 முதல் 6 மீட்டர் தூரம் வரை நகர்ந்துள்ளதாக இத்தாலி நாட்டைச் சேர்ந்த பூகம்பவியல் நிபுணர் பேராசிரியர் கார்லோ டாக்லியானி தெரிவித்துள்ளார். இவர் இத்தாலி தேசிய பூகம்பவியல் கழகத்தின் தலைவராகவும் இருக்கிறார்.

இதுகுறித்து டாக்லியானி அளித்துள்ள ஒரு பேட்டியில், சிரியாவின் நிலப்பரப்பில் நிலநடுக்கம் பெரிய பாதிப்பைக் கொடுக்கவில்லை. ஆனால் துருக்கியானது, 5 முதல் 6 மீட்டர் வரை நகர்ந்துள்ளது. இருப்பினும் இது முதல்கட்ட தகவல்தான். செயற்கைக் கோள் படங்களைப் பார்த்த பிறகுதான் சரியான  தகவல் நமக்குக் கிடைக்கும் என்றார் அவர். 

டாக்லியானி மேலும் கூறுகையில், துருக்கியில் கிட்டத்தட்ட 190 கிலோமீட்டர் நீளம் மற்றும் 25 கிலோமீட்டர் அகலத்திற்கு நிலநடுக்கத்தால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தப் பகுதியில் நிலப்பரப்பானது மிகக் கடுமையான அதிர்வைக் கண்டுள்ளது.  இதனால்தான் சேதம் அதிகமாக இருந்திருக்கிறது. ஒரு முறை மட்டும் அல்லாமல் தொடர்ந்து  நிலநடுக்கங்களும், நில அதிர்வுகளும் தொடர்ந்து  கொண்டிருந்ததால் பாதிப்பு மிகக் கடுமையாக இருந்தது. எல்லாமே சில விநாடிகளில் நடந்துள்ளது. 

இதற்கிடையே, லண்டன் பல்கலைக்கழக கல்லூரி இயற்கை பேரிடர் துறைத் தலைவர் இலான் கெல்மான் கூறுகையில்,பொதுவாக பூகம்பங்களால் மக்கள்  உயிரிழப்பதில்லை. மாறாக பூகம்பத்தால் ஏற்படும் கட்டட இடிபாடுகள் உள்ளிட்டவற்றில் சிக்கித்தான் மக்கள்உயிரிழக்கிறார்கள். கட்டடங்கள் சேதமடைந்ததும் உடனடியாக மீட்புப் பணியில் ஈடுபட்டால் பெரும்பாலான மக்களைக் காப்பாற்றி விட முடியும். துருக்கி,  சிரியாவில் மீட்கப்பட்டவர்களில் 90 சதவீதம் பேர் முதல் 3 மணி நேரத்திற்குள் மீட்கப்பட்டவர்கள்தான் என்றார் அவர்.