முன்னாள் ராணுவ வீரரா?.. அப்ப உங்களுக்கு சொத்துவரி வீட்டு வரியில் சலுகை இருக்கு.. சூப்பர் அறிவிப்பு!

Meenakshi
Mar 13, 2024,11:44 AM IST

சென்னை: முன்னாள் ராணுவ வீரர்களுக்கு சொத்து வரி, வீட்டு வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.


2024-2025ம் ஆண்டிற்கான முதல் சட்டப்பேரவை கூட்டம் கடந்த மாதம் நடந்தது. கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி நிதி மற்றும் மனித வள மேலாண்மை துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், கைம்பெண்கள், போரில் ஊனமுற்ற வீரர்கள் உள்ளிட்ட சிலருக்கு மட்டும் அளிக்கப்பட்டு வரும் வரிச்சலுகை, அனைத்து முன்னாள் படை வீரர்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என தெரிவித்திருந்தார். 




இந்த நிலையில் தமிழ்நாடு அரசு சார்பில் முன்னாள் படை வீரர்களுக்கு சொத்துவரி வீட்டு வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த அரசு ஆணையை முன்னாள் ராணுவ வீரர்கள் பயன்படுத்த நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளது. அந்த விவரம்:


* முன்னாள் படை வீரர்கள் நிரந்தரமாக தமிழகத்தில் குடியிருப்பவராக  இருக்க வேண்டும்.

*  முன்னாள் படை வீரர் குடியிருக்கும் கட்டடத்திற்கு மட்டும் இச்சலுகை வழங்கப்படும்.

*  வருமான வரி செலுத்துபவராக இருக்கக் கூடாது.

*  ராணுவப் பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு மறு வேலை வாய்ப்பு திட்டத்தில் மத்திய அல்லது மாநில அரசின் கீழ் பணியில் வேலை செய்யக்கூடாது.

*  மறு வேலையில் ஓய்வு பெற்று ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு இந்த சலுகை பொருந்தாது.


இந்த திட்டத்தின் மூலம் 1.20 லட்சத்திற்கு அதிகமான முன்னாள் ராணுவ படை வீரர்கள் பயனடைவார்கள் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு முன்னாள் ராணுவ வீரர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.