கீழே விழுந்து காயம்.. தெலங்கானா முன்னாள் முதல்வர் கேசிஆர் மருத்துவமனையில் அனுமதி!
ஹைதராபாத்: தெலங்கானா முன்னாள் முதல்வர் திடீர் கே.சந்திரசேகர ராவ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கீழே விழுந்ததில் காயம் அடைந்ததால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தெலங்கானா மாநிலம் 2014ம் ஆண்டு ஆந்திர மாநிலத்தில் இருந்து பிரிந்து தனி தெலங்கானாவாக உருவானது. தனி தெலங்கானா உருவானதிலிருந்து பி ஆர் எஸ் கட்சியை சேர்ந்த சந்திரசேகர ராவ் தான் முதல்வராக பதவி வகித்து வந்தார். இரண்டு முறை முதல்வராக பதவி வகித்த என்ற பெருமையை பெற்றவர்.
இந்த நிலையில், தெலங்கானாவில் மூன்றாவது சட்டப்பேரவை தேர்தல் கடந்த மாதம் 30ம் தேதி நடைபெற்றது. தொடர்ந்து மூன்றாவது முறையாக தேர்தலில் கேசிஆரே வெற்றி பெறுவார் என்று தொண்டர்கள் எதிர்பார்த்திருந்தனர். 3வது முறையாக இவர் தான் முதல்வராக வருவார் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் காங்கிரஸ் ஆட்சியைக் கைப்பற்றி விட்டது.
இந்நிலையில், தெலங்கானா மாநில காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டி கடந்த 6ம் தேதி முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். பதவியை இழந்த சந்திரசேகர ராவ் எர்ரவெல்லியில் உள்ள அவரது பண்ணை வீட்டில் ஓய்வு பெற்று வந்தார். இந்த நிலையில், நேற்று இரவு அவர் கால் தடுமாறி கீழே விழுந்தார். இதையடுத்து உடனடியாக அவரை சோமாஜிகுடாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவர்கள் அவரை தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து பரிசோதித்தனர்.
பரிசோதனையில் கீழே விழுந்ததில் அவருக்கு இடது இடுப்பு எலும்பு முறிந்தது தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதேசமயம், சந்திரசேகர ராவ் உடல் நிலை தற்போது சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கேசிஆர் உடல் நிலை குறித்து அறிந்த தொண்டர்கள் மருத்துவமனையில் குவிந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.