ஆளுநர் தமிழ்நாடு சட்டசபைக்கு வருவது இதுவே கடைசியாக இருக்கும்.. ஈவிகேஎஸ் இளங்கோவன்
சென்னை: ஆளுநர் ஆர்.என். ரவி தமிழ்நாடு சட்டசபைக்கு வருவது இதுவே கடைசியாக இருக்கும் என்று காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.
தமிழ்நாடு சட்டசபையில் இன்று அடுத்தடுத்து பல்வேறு பரபரப்பான சம்பவங்கள் நடந்து விட்டன. முதலில் ஆளுநர் ஆர்.என். ரவி உரையை முழுமையாக படிக்காமல் அமர்ந்து விட்டார். அடுத்து சபாநாயகர் பேசினார். அவர் பேசி முடித்த பிறகு ஆளுநர் புறக்கணிப்பு குறித்து குறிப்பிட்டார். இதையடுத்து தேசிய கீதம் கூட பாடப்படாத நிலையில் ஆளுநர் வெளிநடப்புச் செய்தார். இதை எதிர்த்து தமிழ்நாடு அரசு சார்பில் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது.
இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து சட்டசபைக் கூட்டத் தொடர் முடிந்த பின்னர் காங்கிரஸ் மூத்த உறுப்பினர் ஈவிகேஎஸ் இளங்கோவன் செய்தியாளர்களிடம் பேசுகையில், சட்டசபைக்கு ஆளுநர் வருவது இதுவே கடைசி முறையாக இருக்கும். காரணம் தேர்தலுக்குப் பின்னர் அவரை தூக்கி எறிந்து விடுவார்கள்.
தமிழ்நாட்டில் எங்கும் எப்போதும் கடைசியில்தான் நாட்டுப் பண் இசைக்கப்படும். இந்த மரபு கூட தெரியாமல் கவர்னர் இருக்கிறார் என்றால் அது அவரது அறியாமை என்பதைத் தவிர வேறு ஒன்றும் இல்லை. என்னைப் பொறுத்தவரை அவர் வராமலேயே இருந்திருக்கலாம் என்றார் இளங்கோவன்.