பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம்.. ஆண் குழந்தைகளுக்கு சொல்லி வளர்ப்போம்

Meena
Oct 11, 2023,04:09 PM IST
- மீனா

ஒரு தந்தையின் டைரியில் கீழ் வரும் வரிகள் காணப்பட்டது . அது என்னவென்றால் தன் மகனின் அன்பு அவன் மனைவி வரும் வரையில். அதே தன் மகளின் அன்பு நான் மயானம் செல்லும் வரை என்று எழுதி இருந்தது. ஒரு தந்தை தன் மகள் மீது வைத்திருக்கும் அதிகப்படியான நம்பிக்கையை தான் இது காட்டுகிறது. தான் மகள் மீது வைத்திருக்கும் அன்பு மகள் தன் மீது வைத்திருக்கும் அன்பும் ஒருபோதும்  மாறாது அழியாது என்பதனை இது குறிக்கிறது. இத்தகைய சிறப்புகளை உடைய நம் பெண் குழந்தைகளை நாம் கொண்டாடாமல் இருக்கலாமா. 

ஏனென்றால் ஒரு காலத்தில் நம் நாட்டில் பெண் குழந்தைகள் மீதான அடக்குமுறைகள் அவர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் அநேகம் இருந்தன. அதில்  முக்கியமானவைகள் பெண் குழந்தைகள் பிறந்து விட்டால் கூடவே தன்னுடைய சொத்து அழிந்து போவதாக உணர்ந்தார்கள். ஏனென்றால் பெண் குழந்தைகள் பிறக்கும்போது அவர்கள் வளர்ந்து பெரியவர்களாகி திருமணம் செய்யும் போது தன்னுடைய செல்வங்களையும் சேர்த்து கொடுக்க வேண்டும் என்று நினைத்தனர். பெண் குழந்தை பிறந்தாலே அடுத்த வீட்டிற்கு போகப் போகிறவர் தான் என்று அலட்சியமாகவும் அதே நேரத்தில் பெண்தானே என்று மதிப்பு குறைவாகவும் நடத்தப்பட்டனர். 



இத்தகைய காரணங்களினால் குழந்தை திருமணங்கள், அடிப்படை கல்வி மறுப்பு, சுதந்திர தடை போன்ற இன்னல்களுக்கு ஆளாக்கப்பட்டார்கள். ஆனால் நம் நாட்டின் தலைவர்களும், கவிஞர்களும் நம் பெண்களின் நிலையை அறிந்து அவர்களின் சுதந்திரத்திற்காக குரல் கொடுத்து அதை சாத்தியமும் ஆக்கினார்கள்.
நாம் வேண்டுதல் செய்து கிடைப்பது ஆண் குழந்தை என்றால் நாம் வேண்டாமலேயே கடவுளாகவே நமக்கு கொடுக்கும் வரம் பெண் குழந்தைகள் தான். 

நம் கவிஞர்களான பாரதியாரும் பாரதிதாசனும் கூட பெண் கல்வியின் முக்கியத்துவத்தை குறித்து  குறிப்பிடுகையில்,  ஒரு ஆண் கல்வி கற்றால் அது அவனுக்கு மட்டுமே பயனுள்ளதாக இருக்கும் அதே ஒரு பெண் கல்வி கற்றால் அந்த குடும்பமே அதனால் பயன் பெறும் என்று பெண் கல்வியின் முக்கியத்துவத்தை அனைவருக்கும் அறியும் படி எடுத்து உரைத்தனர். நம் நாட்டின் பெண் குழந்தைகளின் நிலைமை இவ்வாறு இருந்தது போல உலகம் முழுவதும் உள்ள  பெண் குழந்தைகள் அனேக பிரச்சனைகளால் பாதிக்கப்படுகிறார்கள். ஆகையால் இத்தகைய நாளை கொண்டாட முக்கிய காரணமே பெண் குழந்தைகளுக்கு அவர்களின் வாழ்க்கையில் அவர்களுக்கு கிடைக்க வேண்டிய அடிப்படையான உரிமைகள் கிடைக்க  வழி ஏற்படுத்திக் அவர்களுக்கு வாய்ப்புகள் கொடுக்க வேண்டும் என்பதே . 

இப்படி வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுக்கும் போது அவர்களின் முக்கியத்துவம் மற்றும் அவர்களின் திறமைகளை உலகறிய செய்ய இன்றைய நாள் ஒரு முன்மாதிரியாக இருக்கும். அதே நேரத்தில் குழந்தை திருமணங்கள், கல்வி கற்க தடை, வன்முறை, பாகுபாடு மற்றும் பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளாகும் குழந்தைகளுக்கு அனைத்து பிரச்சனைகளில் இருந்தும் அவர்களை மீட்டு புது வாழ்வு அமைத்துக் கொடுக்கவே இந்த நாள் நியமிக்கப்பட்டுள்ளது. 

பெண் குழந்தைகள் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு தீம் வைத்து அனுசரிக்கப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டிற்கான தீம் "டிஜிட்டல் தலைமுறை, எங்கள் தலைமுறை" என்பதாகும். ஆன்லைனில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை உலகம் அறிய செய்து அவற்றிலிருந்து அவர்களை பாதுகாப்பதே இந்த  தீமீன்  நோக்கமாக உள்ளது.  ஆகையால் நம் வீட்டு இளவரசியை நம்மோடு வாழும் காலங்கள் மட்டும் அல்லாது அவர்கள் திருமணம் செய்து போகும் வீட்டிலும் கூட பாதுகாப்பான சூழ்நிலைகளை அமைத்து கொடுக்கவேண்டியது நாம் ஒவ்வொருத்தர்களுடைய கடமையாகும். 

ஏனென்றால் பெண் என்பவள் ஆணை பார்த்துக் கொள்வது அவளுடைய கடமை என்று சொல்வதைப் போல , ஒரு பெண்ணுக்கு பாதுகாப்பான சூழ்நிலையை அமைத்துக் கொடுப்பதும் ஒரு ஆணின் கடமை என்று சொல்லி வளர்க்க வேண்டும். இன்றைய ஆண் ,பெண் குழந்தைகளே நாளைய சமுதாயத்தின் ஆக்க சக்திகள் என்பதனை நாமும் கருத்தில் கொண்டு இத்தகைய போதனைகளை அவர்களுக்கு சொல்லி வளர்க்க வேண்டியது நாம் ஒவ்வொருத்தருடைய கடமையாகும். பிறகு என்ன இந்த நாள் மாத்திரமல்ல ஒவ்வொரு நாளுமே நம் பெண் பிள்ளைகளை கொண்டாட நாம் எப்போதும் தயாராக இருக்க வேண்டும்.

இன்று பெண் குழந்தைகளுக்கான சர்வதேச தினம். ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 11ஆம் தேதி உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.