பிரதமர் மோடிக்கும் இந்த லட்டைதான் கொடுத்தாங்களா? .. திகிலடிக்கும் திருப்பதி அசைவ லட்டு விவகாரம்
டில்லி : திருப்பதி ஏழுமலையான் கோவில் லட்டு பிரசாதத்தில் விலங்கு கொழுப்பு சேர்க்கப்பட்டதாக வெளியான விவகாரம் தற்போது தேசிய அளவில் பூதாகரமாகி உள்ளது. பலவிதமாக கேள்விகளும் இது தொடர்பாக எழுப்பப்பட்டு வருகிறது.
முந்தைய ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சி காலத்தில் திருப்பதி கோவில் லட்டு பிரசாதம் தயாரிக்க நெய்க்கு பதிலாக விலங்கு கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக தற்போதைய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை தெரிவித்திருந்தார். ஆனால் அதை ஜெகன் மோகன் ரெட்டி மறுத்திருந்தார். அரசியல் ஆதாயத்திற்காக, அனைவரின் கவனத்தையும் திசை திருப்புவதற்காக இவ்வாறு சந்திரபாபு நாயுடு சொல்வதாக தெரிவித்திருந்தார். ஆனால் இது பற்றி விளக்கம் அளித்த திருமலை திருப்பதி தேவஸ்தான இஓ ஷியாமளா ராவ், தரமற்ற நெய் லட்டு தயாரிப்பிற்கு பயன்படுத்தப்பட்டது உண்மை தான். அந்த நெய்யில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டிருந்தது ஆய்வக சோதனையில் நிரூபிக்கப்பட்டது என்றும் தெரிவித்திருந்தார்.
தேவஸ்தானமே இப்படி ஒரு விளக்கத்தை அளித்திருப்பதால் திருமலை திருப்பதியின் புனிதத் தன்மை கேள்விக்குறியாகவம், சர்ச்சைக்குரியதாகவும் மாறியுள்ளது. 2019 முதல் 2024ம் ஆண்டு வரையிலான ஜெகன் மோகன் ஆட்சி காலத்தில் பிரதமர் மோடி, அரசியல் பிரமுகர்கள், முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட பலருக்கும் திருப்பதி பெருமாள் சிலையுடன், லட்டு பிரசாதங்கள் பரிசாக வழங்கப்பட்டது. அப்படியானால் அவை அனைத்துமே மாட்டு கொழுப்பு கலந்த லட்டுக்கள் தானா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.
ராமர் கோவிலுக்கு 1 லட்சம் லட்டு பார்சல்
அது மட்டுமல்ல இந்த ஆண்டு அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவிற்கும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான லட்டுக்கள் திருப்பதி தேவஸ்தானம் சார்பில் அனுப்பப்பட்டது. இதனால் திருப்பதி லட்டு விவகாரம் பெரும் சர்ச்சைக்குரியதாக மாறி உள்ளது. இதனால் இதில் தலையிட்ட மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜெ.பி.நட்டா, இது குறித்து விரிவான விசாரணை நடத்தி, அறிக்கை அளிக்க ஆந்திர அரசை கேட்டுக் கொண்டுள்ளார். அறிக்கையின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் அயோத்தி ராமர் கோவில் தலைமை அர்ச்சகர் ஆர்ச்சார்யா சத்யேந்திர தாஸ், திருப்பதி லட்டு விவகாரத்தில் அதிர்ச்சி தெரிவித்துள்ளார். ஒரு வேளை சுவாமி பிரசாதத்தில் மாட்டு கொழுப்பு கலக்கப்பட்டது உண்மை என்றால் அது மன்னிக்க முடியாதது. இதற்கு காரணமானவர்கள் மீது மிக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். அப்படி இல்லை என்றால் இந்து கோவில் பிரசாதங்களில் பயன்படுத்தப்படும் பொருட்களின் மீதான நம்பிக்கை கேலி பொருளாகி விடும். இதனால் தீவிரமாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.
ஆன்மிகவாதிகள் மட்டுமின்றி லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியும், இந்த விவகாரத்தில் தீவிர விசாரணை நடத்த வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். இல்லாவிட்டால் இது பக்தர்கள் ஸ்ரீ வெங்கடேஷ்வர சுவாமியின் பிரசாதத்தை பெற்றுச் செல்வதையும் பாதிக்கும். நாடு முழுவதிலும் உள்ள வழிபாட்டு தலங்களின் புனித தன்மை காக்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்