Erode East: இடைத் தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடுமா.. காத்திருக்கும் சஸ்பென்ஸ்!

Su.tha Arivalagan
Dec 14, 2024,08:04 PM IST

ஈரோடு: ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சி போட்டியிடுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


ஈரோடு கிழக்குத் தொகுதி சட்டசபை உறுப்பினரான மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் இன்று காலமானார். அவரது மறைவால் அத்தொகுதி காலியாகியுள்ளது.  தேர்தல் சட்டப்படி ஒரு நாடாளுமன்றத் தொகுதியோ அல்லது சட்டசபைத் தொகுதியோ காலியாக மாறினால், 6 மாதத்திற்குள் அங்கு தேர்தல் நடத்தப்பட்டு புதிய உறுப்பினரைத் தேர்வு செய்ய வேண்டும். ஒரு வேளை அருகாமையில் பொதுத் தேர்தல் வந்தால் அத்தோடு சேர்த்து காலியாக உள்ள தொகுதிக்கும் தேர்தல் நடத்தப்படும்.


தமிழ்நாட்டைப் பொறுத்தவரை நமக்கு 2026ல்தான் பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். எனவே அடுத்த ஆறு மாதத்திற்குள் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத் தேர்தல் நடத்தப்படுவதற்கான வாய்ப்புகளே அதிகம் உள்ளது.


ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத் தேர்தல் நடத்தப்பட்டால் அதில் நிச்சயம் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ்தான் மீண்டும் போட்டியிடும். எதிர் முனையில் யாரெல்லாம் நிற்பார்கள் என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த இடத்தில் நாம் விக்கிரவாண்டி இடைத் தேர்தலை பார்க்க வேண்டியுள்ளது.




விக்கிரவாண்டி இடைத்தேர்தல்


விக்கிரவாண்டி இடைத்தேர்தல் நடந்தபோது அத்தேர்தலை புறக்கணிப்பதாக அதிமுக, பாஜக, தேமுதிக ஆகிய கட்சிகள் அறிவித்தன. திமுக வை எதிர்த்து நாம் தமிழர் கட்சி, பாமக ஆகிய கட்சிகள் மட்டுமே பெரிய கட்சிகளாக போட்டியிட்டன. இதனால் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா அபார வெற்றி பெற்று புதிய வரலாறும் படைத்தார். திமுகவுக்கு எதிராக போட்டியிடாமல் தவிர்த்தால் மொத்த வாக்குகளும் திமுகவுக்கு எதிரில் நிற்கும் பாமக வேட்பாளருக்குப் போகும் என்று அதிமுக, பாஜக, தேமுதிக ஆகியவை திட்டமிட்டதாக அப்போது பேசப்பட்டது. ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. மாறாக, மாற்றுக் கட்சியினரும் சேர்ந்து திமுகவுக்கே வாக்களித்திருந்தனர்.


இதனால் வருகிற ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் அதுபோல நடக்காமல் தவிர்க்க எதிர்க்கட்சிகள் முயலக் கூடும். கடந்த இடைத் தேர்தலில் திமுக கூட்டணியை எதிர்த்து அதிமுக, தேமுதிக, நாம் தமிழர் கட்சி ஆகியவை பெரிய கட்சிகளாக போட்டியிட்டன. இதில் தேமுதிக டெபாசிட் இழந்தது. அதிமுக 2வது இடத்தைப் பிடித்தது. தேமுதிகவும் வெறும் ஆயிரத்து சொச்சம் வாக்குகளை மட்டுமே பெற்று பரிதாபத் தோல்வியைச் சந்தித்தது. வருகிற இடைத் தேர்தலில் காட்சி எப்படி இருக்கும் என்று தெரியவில்லை.


அதிமுக நேரடியாக போட்டியிடுமா அல்லது தான் போட்டியிடுவதைத் தவிர்த்துக் கொண்டு தேமுதிகவை நிறுத்துமா என்று தெரியவில்லை. மறுபக்கம் பாஜக கூட்டணி சார்பில் தமாகாவுக்கு சீட் கொடுக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. 2021 பொதுத் தேர்தலில் தமாகா சார்பில் யுவராஜா போட்டியிட்டு, ஈவேரா திருமகனிடம் தோல்வியைத் தழுவியிருந்தார் என்பது நினைவிருக்கலாம். எனவே மீண்டும் போட்டியிட் யுவராஜா முயலலாம். அப்படி நடந்தால் திமுக கூட்டணி - அதிமுக கூட்டணி - பாஜக கூட்டணி என்று மும்முனைப் போட்டி உருவாகும். கூடவே நாம் தமிழர் கட்சியும் கண்டிப்பாக போட்டியிடும் என்பதால் நான்கு முனைப் போட்டி உறுதி.


தவெகவின் நிலைப்பாடு என்னவாக இருக்கும்?


இந்த இடத்தில்தான் தவெக குறித்த பார்வை வருகிறது. கடந்த ஜூலை மாதம் விக்கிரவாண்டி இடைத் தேர்தலின்போது தவெக ஆக்டிவாக இல்லை. கட்சி பிப்ரவரியிலேயே விஜய் தொடங்கி விட்டாலும் கூட அதன் பிறகு கட்சிக் கொடியோ அல்லது வேறு எந்த ஆக்டிவிட்டியோ இல்லை. ஆனால் கடந்த அக்டோபர் மாதம் இதே விக்கிரவாண்டி தொகுதிக்குட்பட்ட வி. சாலை கிராமத்தில் அக்கட்சி நடத்திய பிரமாண்டமான மாநாடு அரசியல் களத்தையே மாற்றிப் போட்டுள்ளது. மேலும் சில வாரங்களுக்கு முன்பு சென்னையில் நடந்த அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் விஜய் பேசிய பேச்சு மேலும் சூட்டைக் கூட்டியது.


இதனால் வருகிற ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் விஜய் கட்சி போட்டியிடுமா என்ற எதிர்பார்ப்பு பலமாக உள்ளது. ஆனால் அதற்கான வாய்ப்புகள் குறைவே என்றுதான் தெரிகிறது. விக்கிரவாண்டி இடைத் தேர்தலின்போதும் கூட எங்களது இலக்கு 2026 பொதுத் தேர்தல்தான் என்று விஜய் தெரிவித்திருந்தார். இப்போதும் அதே பதிலையே அவர் கொடுப்பார் என்று தெரிகிறது.  காரணம், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இடைத் தேர்தல் என்றாலே பெரும்பாலும் ஆளும் கட்சிதான் ஜெயிக்கும். அதுதான் வரலாறு. மிக மிக அரிதாகவே எதிர்க்கட்சிகளுக்கு வெற்றி வாய்ப்பு இருக்கும்.


அந்த அடிப்படையில் ஈரோடு கிழக்கில் கடந்த 2023 இடைத் தேர்தலிலும் கூட காங்கிரஸே வென்றது. வரும் இடைத் தேர்தலிலும் திமுக கூட்டணிக்கே வெற்றி வாய்ப்பு அதிகமாக இருக்கும் என்று கருதப்படுகிறது. ஒரு வேளை விஜய் கட்சி போட்டியிட்டால், திமுக கூட்டணியினர், தவெகவின் தோலவியை உறுதி செய்ய மிக மிக கடுமையாக களம் இறங்கக் கூடும். எனவே விஜய்க்கு வெற்றி வாய்ப்பு என்பது கேள்விக்குறியாகக் கூடும். பண பலம், படை பலம், ஆள் பலம் என எல்லா பலத்துடனும் ஆளுங்கட்சி இருக்கும்போது அதைத் தாண்டி எதிர்க்கட்சி வெல்வதும் கேள்விக்குறிதான். 


தனது அரசியல் பயணத்தின் இரு முக்கியக் கட்டங்களை விஜய் வெற்றிகரமாகமாக்கியுள்ளார். எனவே அதைக் கெடுத்துக் கொள்ளும் வகையில் ஈரோடு கிழக்கில் அவர் போட்டியிட வாய்ப்பில்லை என்று சொல்லப்படுகிறது. அது 2026 பொதுத் தேர்தல் சமயத்தில் பாதகத்தை ஏற்படுத்தக் கூடும் என்பதால் விஜய் ரிஸ்க் எடுக்க வாய்ப்பில்லை என்றே கருதப்படுகிறது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்