Erode East: 3 ஆண்டுகளில்.. 3வது தேர்தலை சந்திக்கப் போகும் ஈரோடு கிழக்கு.. தமிழ்நாட்டில் முதல் முறை!
ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டசபைத் தொகுதி, மூன்றரை ஆண்டுகளில் 3வது முறையாக தேர்தலை சந்திக்கவுள்ளது. இதுபோல தமிழ்நாட்டில் இதற்கு முன்பு நடந்ததில்லை.
ஈரோடு கிழக்கு சட்டசபைத் தொகுதியின் உறுப்பினராக இருந்து வந்த முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் இன்று காலை காலமானார். அவரது மறைவால் ஈரோடு கிழக்கு சட்டசபைத் தொகுதி காலியாகியுள்ளது.
ஈரோடு கிழக்கு சட்டசபைத் தொகுதியானது ஈரோடு மாநகரப் பகுதிகளை உள்ளடக்கிய பொதுத் தொகுதியாகும். ஈரோடு சட்டசபைத் தொகுதியிலிருந்து பிரித்து கடந்த 2008ம் ஆண்டு இந்த தொகுதி உருவாக்கப்பட்டது. அதன் பிறகு 2011ம் ஆண்டு முதல் தேர்தலை அது சந்தித்தது. அத்தேர்தலில் அதிமுக கூட்டணியிலிருந்து போட்டியிட்ட தேமுதிக வேட்பாளர் வி.சி. சந்திரகுமார் வெற்றி பெற்றார். திமுகவின் மூத்த தலைவர் முத்துச்சாமியை அவர் தோற்கடித்தார்.
2016ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் அதிமுக - தேமுதிக கூட்டணி உடைந்து போயிருந்தது. அதிமுக சார்பில் தென்னரசு போட்டியிட்டார். இம்முறை திமுகவில் இணைந்து அந்தக் கட்சி சார்பில் வி.சி.சந்திரகுமார் போட்டியிட்டார். அதிமுக வெற்றி பெற்றது. திமுக தோல்வியுற்றது. தேமுதிகவின் சார்பில் போட்டியிட்ட பொன்சேர்மன் 3வது இடத்தையே பெற்று டெபாசிட்டை இழந்தார்.
2021 தேர்தலில் இந்தத் தொகுதி ஈவிகேஎஸ் இளங்கோவன் குடும்பத்திற்குப் போனது. அத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் இளங்கோவனின் மகன் ஈவேரா திருமகன் போட்டியிட்டார். வெற்றியும் பெற்றார். 2வது இடத்தை தமாகாவின் யுவராஜா பெற்றார். 3வது இடத்தை நாம் தமிழர் கட்சி பெற்றது.
இத்தேர்தலில் வெற்றி பெற்ற ஈவேரா திருமகன் 2023ம் ஆண்டு மரணமடைந்தார். இதையடுத்து இத்தொகுதிக்கு இடைத் தேர்தல் வந்தது. அதில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டார். அதற்கு முன்பு நடந்த தேர்தல்களை விட மிக அதிகபட்ச வாக்கு வித்தியாசத்தில் இளங்கோவன் வெற்றி பெற்றார். அதாவது 66,233 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார். 2வது இடம் அதிமுகவுக்கும், 3வது இடம் நாம் தமிழர் கட்சிக்கும் கிடைத்தன. தேமுதிகவுக்கு 4வது இடமே கிடைத்தது.
தேர்தலில் வெற்றி பெற்றாலும் கூட ஈவிகேஎஸ் இளங்கோவனால் ஆக்டிவாக செயல்பட முடியவில்லை. காரணம் அவரது உடல் நிலை அடுத்தடுத்து பாதிப்புக்குள்ளானது. இதனால் தொடர்ந்து பணியாற்ற முடியாத நிலையில் இருந்து வந்தார் இளங்கோவன். இன்று அவர் மரணத்தைத் தழுவியுள்ளதால் மீண்டும் ஒரு தேர்தலை சந்திக்கும் நிலைக்கு ஈரோடு கிழக்கு வந்துள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மிகக் குறுகிய காலத்தில் ஒரு தொகுதிக்கு 3 முறை தேர்தல் நடப்பது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது.
கடந்த மூன்றரை ஆண்டுகளில் இது 3வது தேர்தலாக இருக்கும். முதல் தேர்தலை அதிமுக ஆட்சியில் சந்தித்த ஈரோடு கிழக்கு தொகுதி, அடுத்த 2 தேர்தல்களையும் திமுக ஆட்சியில் சந்திக்கவுள்ளது. காங்கிரஸ் சார்பில் யார் போட்டியிடுவார் என்பது தெரியவில்லை. ஈவிகேஎஸ் இளங்கோவனின் இன்னொரு மகனான சஞ்சய் போட்டியிடுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கடந்த தேர்தலிலேயே அவர் தான் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் அதை மாற்றி இளங்கோவனே பின்னர் போட்டியிட்டார் என்பது நினைவிருக்கலாம்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்