ஈரோடு கிழக்கு ஓபிஎஸ் வேட்பாளர் செந்தில்முருகன் எடப்பாடி அணிக்குத் தாவினார்!

Su.tha Arivalagan
Mar 09, 2023,02:15 PM IST

சென்னை: ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத் தேர்தலில் ஓ.பி.எஸ். அணி சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செந்தில்முருகன் தடாலடியாக எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுகவில் இணைந்துள்ளார்.


ஈரோடு கிழக்கு சட்டசபைத் தொகுதிக்கு சமீபத்தில் இடைத் தேர்தல் நடைபெற்றது.  இதில் ஓ.பன்னீர் செல்வம் அணி சார்பில் வேட்பாளராக செந்தில்முருகன் அறிவிக்கப்பட்டார். அவர் ஓபிஎஸ் அதிமுகவின் அமைப்புச் செயலாளராக இருந்தவர். மறுபக்கம் அதிமுக சார்பில் தென்னரசு வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.


இப்படி ஆளுக்கு ஒரு வேட்பாளரை எடப்பாடியும், ஓபிஎஸ்ஸும் அறிவித்ததால் இரட்டை இலை சின்னம் முடங்கும் வாய்ப்பு உருவானது. இதையடுத்து பாஜக உள்ளே புகுந்து பஞ்சாயத்து பேசியது. எடப்பாடி பழனிச்சாமி இறங்கி வரவில்லை. ஆனால் ஓபிஎஸ் இறங்கி வந்தார். தனது வேட்பாளர் வாபஸ் பெறுவார் என்று தெரிவித்தார். இதையடுத்து அதிமுக சார்பில் தென்னரசு போட்டியிட்டு தோல்வியுற்றார். டெபாசிட் மட்டுமே அவருக்கு மிஞ்சியது.


இந்த நிலையில் செந்தில்முருகன் திடீரென எடப்பாடி பழனிச்சாமி அணிக்குத் தாவியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஓ.பன்னீர் செல்வம், செந்தில் முருகனை கட்சியை விட்டு நீக்குவதாக அறிவித்துள்ளார்.