ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிப்பு.. இடைத் தேர்தல் எப்போது நடைபெறும்?
சென்னை: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மறைவையொட்டி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதியில் ஜனவரி அல்லது பிப்ரவரியில் டெல்லி சட்டமன்ற தேர்தலோடு சேர்த்து தேர்தல் நடத்தப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதியில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருந்தவர் திருமகன் ஈவெரா கடந்தாண்டு காலமானார். அதன் பின்னர் அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்தப்பட்டது. இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் திருமகன் ஈவெராவின் தந்தை ஆவார்.
ஈவிகேஎஸ் இளங்கோவன் ஈரோடு கிழக்கு எம்எல்ஏவாக வலம் வந்த நிலையில், சில மாதங்களுக்கு முன்னர் நெஞ்சுவலி ஏற்பட்டது. இதன் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.அதன்பின்னர் உடல்நிலை தேறிய நிலையில் வீடு திரும்பினார். இதையடுத்து கடந்த நவம்பர் 27ம் தேதி திடீர் என உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர் சிகிச்சை பயன் தராத நிலையில், கடந்த 14ம் தேதி உயிரிழந்தார்.
இவரது மறைவிற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்டோர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். இந்த நிலையில், ஈரோடு கிழக்கு சட்டபேரவை தொகுதி காலியானதாக தமிழ்நாடு சட்டப்பேரவை செயலகம் அறிவித்துள்ளது.
சட்டப்பேரவை காலியானதாக அறிவிக்கப்பட்ட 6 மாதங்களுக்குள் அந்த தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற விதியின் படி, ஈரோடு தொகுதியில் 2025 ஜனவரி அல்லது பிப்ரவரியில் டெல்லி சட்டமன்ற தேர்தலோடு சேர்த்து தேர்தல் நடத்தப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்