ஈரோடு கிழக்கு: அதிமுக வேட்பாளராக முன்னாள் எம்எல்ஏ தென்னரசு அறிவிப்பு

Baluchamy
Feb 01, 2023,11:17 AM IST
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அதிமுக வேட்பாளர் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக சார்பில் தென்னரசு போட்டியிடுவார் என அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.



ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிட நாம் தமிழர் கட்சி, காங்கிரஸ், அமமுக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளரை அறிவித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அதிமுக இரண்டாக பிளவுப்பட்டு, ஒபிஎஸ் மற்றும் இபிஎஸ் அணியாக பிரிந்துள்ளது.

ஒபிஎஸ் மற்றும் இபிஎஸ் அணியினர் எப்போது வேட்பாளரை அறிவிப்பார்கள், எப்போது தேர்தல் களம் சூடுபிடிக்கும் என எதிர்பார்த்துக்கொண்டிருந்த நேரத்தில் அதிமுகவின் முன்னாள் எம்எல்ஏ கே.எஸ். தென்னரசு ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக இபிஎஸ் அணி சார்பில் போட்டியிடுவார் என அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

அதிமுகவின் முன்னாள் எம்எல்ஏ கே.எஸ். தென்னரசு, கடந்த 2001 மற்றும் 2006 ஆகிய ஆண்டுகளில் நடந்த சட்டசபை தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு வென்றவர். மேலும் தற்போது இவர் ஈரோடு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளராக இருந்து வருகிறார்.

இந்நிலையில் அதிமுகவின் இபிஎஸ் அணி ஈரோடு கிழக்கு வேட்பாளரை அறிவித்த நிலையில் அதிமுகவின் ஒபிஎஸ் அணியின் வேட்பாளர் யார்? ஒபிஎஸ் எப்போது வேட்பாளரை அறிவிப்பார் என ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.