Erode East by election.. ஈவிகேஎஸ் இளங்கோவன் மகனுக்கு சீட் தரப்படுமா.. காங். நிலை என்ன?
சென்னை: ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் மீண்டும் காங்கிரஸ் போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் சார்பில் யார் போட்டியிடப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
ஈரோடு சட்டசபைத் தொகுதிக்கு கடந்த நான்கு ஆண்டுகளில் 3வது முறையாக தேர்தல் நடைபெறவுள்ளது. 2021ல் நடந்த பொதுத் தேர்தலில் திருமகன் ஈவேரா போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட தமாகா வேட்பாளர் யுவராஜ் தோல்வி அடைந்தார். அடுத்து 2023ல் திருமகன் ஈவேரா மறைவால் இடைத் தேர்தல் வந்தது. அதில் அவரது தந்தை ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் தென்னரசு பெரும் தோல்வியைச் சந்தித்தார்.
இந்த நிலையில் தற்போது ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவால் மீண்டும் ஒரு இடைத் தேர்தல் வந்துள்ளது. இந்த முறை யார் போட்டியிடப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மீண்டும் காங்கிரஸே போட்டியிடும் என்றுதான் பொதுவாக கூறப்படுகிறது. அதேசமயம், திமுகவே போட்டியிடலாம் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.
இந்த நிலையில் மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள், ஈரோடு கிழக்கில் சஞ்சய் சம்பத்துக்கு சீட் தர வேண்டும் என்று தீர்மானம் போட்டுள்ளனர். இவர் மறைந்த ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகன் ஆவார். உண்மையில், கடந்த இடைத் தேர்தலில் இவர்தான் போட்டியிடுவதாக இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் இவர் விலகிக் கொள்ளவே இளங்கோவன் போட்டியிட்டார். இந்த நிலையில் மீண்டும் சஞ்சய் சம்பத்தின் பெயர் அடிபட ஆரம்பித்துள்ளது.
ஆனால் இதுதொடர்பாக அகில இந்தியத் தலைமையே முடிவு செய்யும் என்று மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு குறித்து திமுக தலைமை, காங்கிரஸ் தலைமையுடன் ஆலோசித்து முடிவு செய்யப்படும் என்றும் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்