ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் 2025: புறக்கணிக்கும் கட்சிகள்...2வது இடம் யாருக்கு?
சென்னை : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அதிமுக.,வை தொடர்ந்து தேமுதிக.,வும் அறிவித்துள்ளது. இதனால் தேர்தல் களம் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் ஏற்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 05ம் தேதி இடைத்தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. தமிழக மக்களிடம் திமுக.,விற்கு இருக்கும் செல்வாக்கை நிரூபிக்க இந்த முறை காங்கிரசிற்கு வாய்ப்பு அளிக்காமல் தானே களம் இறங்க முடிவு செய்துள்ள திமுக., வி.சி.சந்திரகுமாரை வேட்பாளராக அறிவித்துள்ளது.
இவரை எதிர்த்து போட்டியிட போவது யார் என அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில், இடைத் தேர்தலை புறக்கணிப்பதாக அதிமுக அறிவித்தது. அதைத் தொடர்ந்து தேமுதிக.,வும் தேர்தல் புறக்கணிப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனால் தேர்தல் களம் எப்படி இருக்கும்? போட்டியே இல்லாமல் திமுக வெற்றி பெறுமா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக.,விற்கு கடும் போட்டியை கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்ட அதிமுக., தேர்தல் களத்தில் இருந்து விலகி உள்ளதால், கண்டிப்பாக பாஜக களமிறங்க அதிக வாய்ப்புள்ளது. அண்ணா பல்கலைகழக விவகாரம் உள்ளிட்ட பல விஷயங்களில் திமுக.,வையும், திமுக தலைமையிலான அரசையும் மிக கடுமையாக பாஜக தொடர்ந்து தாக்கி வருகிறது. திமுக.,வை ஆட்சியில் இருந்து அகற்றும் வரை காலில் செருப்பு அணிய மாட்டேன் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஏற்கனவே சபதம் வேறு செய்துள்ளார்.
திமுக.,வை நேரடியாக கடுமையாக எதிர்த்து, பாஜக.,வின் செல்வாக்கை கொங்கு மண்டலத்தில் பலப்படுத்த கண்டிப்பாக அண்ணாமலை தலைமையில் பாஜக ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை சந்திக்க அதிக வாய்ப்புகள் உள்ளது. இப்போது வேட்பாளராக யாரை நிறுத்த போகிறது என்பது தான் மிகப் பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது. பாஜக.,விற்கு அடுத்தபடியாக சீமானின் நாம் தமிழர் கட்சியும் திமுக.,வை கடுமையாக எதிர்த்து வருவதால் ஈரோடு இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி போட்டியிடவும் அதிக வாய்ப்புள்ளது.
அப்படி ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜக, நாம் தமிழர் கட்சி போட்டியிடுவதாக இருந்தால் மும்முனை போட்டி ஏற்பட வாய்ப்புள்ளது. அது திமுக.,விற்கு கண்டிப்பாக நெருக்கடியை தரும். எப்படி இருந்தாலும் இடைத்தேர்தலில் ஆளும் கட்சி தான் வெற்றி பெறும் என்பது நியதி. அப்படி திமுக வெற்றி பெற்றால் இரண்டாவது இடத்தை பிடிக்க போவது பாஜக.,வா? அல்லது நாம் தமிழரா? என்ற கேள்வியும் எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்