ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் 2025 : அதிமுக.,வை தொடர்ந்து தேமுதிக.,வும் புறக்கணிப்பு
சென்னை : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை அதிமுக.,வை தொடர்ந்து தேமுதிக கட்சியும் புறக்கணிப்பதாக அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது.
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்எல்ஏ.,வாக இருந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மரணமடைந்ததை அடுத்து அந்த தொகுதி காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது. வரும் பிப்ரவரி 5ம் தேதி இந்த தொகுதிக்கு தேர்தல் நடக்கும் என அறிவிக்கப்பட்டு, தேர்தலுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இந்த தொகுதியில் இந்த முறை திமுக கூட்டணி சார்பில் திமுக.,வை சேர்ந்த வி.சி.சந்திரகுமார் வேட்பாளராக நிறுத்தப்படுவதாக திமுக தலைமை அறிவித்துள்ளது. இவரை எதிர்த்து யாரெல்லாம் போட்டியிட போகிறார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், தேர்தல் நேர்மையாக நடைபெறாது. திமுக.,வின் பண பலம் மற்றும் அதிகார பலம் தவறாக பயன்படுத்தப்படலாம் என்பதால் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். அதிமுக.,வை தொடர்ந்து தேமுதிக.,வும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது.
கடந்த முறை ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை எதிர்த்து போட்டியிட்ட தேமுதிக வெறும் 1432 ஓட்டுக்கள் மட்டுமே பெற்று படுதோல்வி அடைந்தது. இந்த நிலையில் இந்த முறை தேர்தலையே புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது.
ஏற்கனவே அதிமுக.,வை போல் தேமுதிக.,வும் விக்கிரவாண்டி இடைத்தேர்தலையும் புறக்கணிப்பதாக அறிவித்தது. தொடர்ந்து இடைத்தேர்தல்கள் அனைத்தையுமே தேமுதிக புறக்கணித்து வருவது அக்கட்சி தொண்டர்கள் இடையே குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. கட்சியின் தலைவரான விஜயகாந்த் இல்லாத நிலையில் மக்களை சந்திக்காமல் தேமுதிக இடைத்தேர்தல்களை புறக்கணித்து வருவதால் மக்கள் மனதில் இருந்து தேமுதிக மீதான நம்பிக்கையை குறைய செய்யும் என்ற கருத்து கட்சி தொண்டர்கள் இடையே நிலவி வருகிறது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்