கேஸிலிருந்து விடுவிக்க ரூ. 20 லட்சம் லஞ்சம்.. அமலாக்கத்துறை அதிகாரி கைது.. திண்டுக்கல்லில் பரபரப்பு
திண்டுக்கல்: திண்டுக்கல்லைச் சேர்ந்த டாக்டர் ஒருவரிடம் அவர் மீதான வழக்கிலிருந்து விடுவிப்பதற்காக ரூ. 20 லட்சம் வாங்கியதாக அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி என்பவர் போலீஸாரிடம் பிடிபட்டுள்ளார். அவரது காரிலிருந்து இந்தப் பணத்தை போலீஸார் கைப்பற்றினர்.
தமிழ்நாட்டில் சமீப காலமாக அதிக அளவிலான அமலாக்கத்துறை ரெய்டுகள் நடந்து வருகின்றன. அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், பல்வேறு துறையினரின் வீடுகள், தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்கள், நகைக் கடைகள் என தொடர்ந்து ரெய்டுகள் நடைபெறுகின்றன.
பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் இதில் ஈடுபடுகின்றனர். இந்த நிலையில் திண்டுக்கல் - மதுரை நெடுஞ்சாலையில் போலீஸார் நடத்திய வாகனச் சோதனையில் அங்கித் திவாரி என்பவரின் காரில் ரூ. 20 லட்சம் பணம் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீஸார் அவரிடம் விசாரணை நடத்தியபோது அவரது பெயர் அங்கித் திவாரி என்றும் அமலாக்கத்துறை அதிகாரி என்றும் தெரிய வந்தது.
அவரிடம் இருந்த பணமானது திண்டுக்கல்லைச் சேர்ந்த டாக்டர் ஒருவர் கொடுத்த லஞ்சப் பணம் என்றும் தெரிய வந்தது. அந்த டாக்டர் மீதான வழக்கிலிருந்து அவரை விடுவிக்க இந்த லஞ்சத்தை அங்கித் திவாரி வாங்கியதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து திவாரியை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.