பல மணி நேர சோதனைக்குப் பின்னர்.. கே.சி.ஆரின் மகள் கவிதா கைது.. பரபரப்பில் ஹைதராபாத்!
ஹைதராபாத்: டெல்லி மது விலக்குக் கொள்கை முறைகேட்டு வழக்கில், தெலங்கானா முன்னாள் முதல்வரும், பிஆர்எஸ் தலைவருமான கே.சந்திரசேகர ராவின் மகள் கவிதா, இன்று அதிரடியாக கைது செய்யப்பட்டார். அவரது வீட்டில் நடந்த பல மணி நேர சோதனைக்குப் பின்னர் கவிதாவை அமலாக்கத் துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
ஹைதராபாத் வீட்டில் வைத்துக் கைது செய்யப்பட்ட கவிதாவை, டெல்லிக்கு கொண்டு சென்று விசாரிக்க அமலாக்கத்துறை திட்டமிட்டுள்ளது. கவிதா தற்போது தெலங்கானா சட்ட மேலவையில் உறுப்பினராக இருக்கிறார். கடந்த ஆண்டு இந்த வழக்கில் விசாரிக்கப்பட்டிருந்தார் கவிதா. அதன் பின்னர் விசாரணைக்கு வருமாறு 2 முறை சம்மன் அனுப்பியும் அவர் வரவில்லை.
மீண்டும் அவரை விசாரிக்க சம்மன் அனுப்பியிருந்தது அமலாக்கத்துறை. அதை எதிர்த்து கவிதா, உச்சநீதிமன்றத்தை அணுகியிருந்தார். அதை விசாரித்த உச்சநீதிமன்றம், புதன்கிழமை வரை அவர் விசாரிக்க தடை விதித்திருந்தது. இந்த வழக்கின் விசாரணை வருகிற செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் இன்று அதிரடியாக களம் இறங்கி கவிதாவைக் கைது செய்து விட்டது அமலாக்கத்துறை.
முன்னதாக இன்று காலை முதல் கவிதாவின் வீட்டில் பல மணி நேரம் சோதனையிட்டது அமலாக்கத்துறை. அதன் பின்னர் கடும் வாக்குவாதத்திற்குப் பின்னர் கவிதாவை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். அங்கிருந்து அவரை அழைத்துச் சென்றனர். தெலங்கானாவில் காங்கிரஸ் அரசு 100 நாட்களை நிறைவு செய்த நாளான இன்று, பிரதமர் நரேந்திர மோடி ஹைதராபாத்தில் இன்று மாலை ரோடுஷோ நடத்திய நாளில் கவிதாவை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.