அண்ணாமலைக்கு திடீர் உடல் நலக்குறைவு... 2 வாரம் ஓய்வெடுக்க அட்வைஸ்!

Su.tha Arivalagan
Oct 04, 2023,05:29 PM IST

சென்னை: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால் அவரது நடை பயணம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. 2 வாரங்களுக்கு அவர் பெட் ரெஸ்ட் எடுக்க வேண்டும் என்று டாக்டர்கள் பரிந்துரைத்துள்ளனர்.


தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை டெல்லி சென்றிருந்தார். அங்கு பாஜக உயர் மட்டத் தலைவர்களைச் சந்தித்தார். அதிமுக பாஜக கூட்டணி விவகாரம் தொடர்பாக அவர் பல்வேறு முக்கிய ஆலோசனைகளை உயர் மட்டத் தலைவர்களுடன் நடத்தினார்.


அதன் பின்னர் சென்னை திரும்பிய அண்ணாமலைக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து சென்னை குளோபல் மருத்துவமனைக்குச் சென்ற அண்ணாமலைக்கு டாக்டர்கள் பரிசோதனை நடத்தினர். இதுதொடர்பாக குளோபல் மருத்துவமனை விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டிருந்ததாவது:




39 வயதாகும் கே. அண்ணாமலை, குளோபல் ஹெல்த் சிட்டி மருத்துவமனைக்கு அக்டோபர் 3ம் தேதி மாலைக்கு மேல் வந்தார். அவருக்கு   இருமல், மூச்சு விட சிரமம், தொண்டை வலி, உடல் வலி, அசதி ஆகியவை இருந்தது. இதையடுத்து அவருக்கு சிடி ஸ்கேன் எடுத்துப் பார்க்கப்பட்டது. அப்போது நுரையீரலில் லேசான பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவருக்கு மருந்துகள் கொடுக்கப்பட்டு வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.


5 நாட்களுக்கு அவருக்கு மருந்துகள் தரப்பட்டன. 5 நாட்கள் கழித்து மீண்டும் வருமாறு அவர் அறிவுறுத்தப்பட்டுள்ளார். இரண்டு வாரம் அவர் ஓய்வெடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. காரணமாக அவதி


நடைபயணம் ரத்து




இந்த நிலையில் தமிழ்நாடு பாஜக விடுத்துள்ள அறிக்கையில், என் மண் என் மக்கள் நடைபயணம் அக்டோபர் 6ஆம் தேதி தொடங்கவிருந்த நிலையில், தற்போது மாநில தலைவருக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவால் அக்டோபர் 16ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது. 


நாளை திட்டமிட்டபடி மாவட்ட தலைவர்கள் கூட்டம் நடைபெறு ம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். திருத்தப்பட்ட நடைபயண பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


டெல்லிக்குப் போய் வந்த கையோடு உடல் நலக்குறைவால் அண்ணாமலை பாதிக்கப்பட்டிருப்பது அவரது ஆதரவாளர்களை கவலை கொள்ளச் செய்துள்ளது.