அவஸ்தையில் பயணிகள்.. இன்றும் சென்னை பீச் - தாம்பரம் ரயில் சேவை பாதிப்பு!

Meenakshi
Oct 02, 2023,02:19 PM IST

சென்னை: தாம்பரம் டூ சென்னை கடற்கரை வரை இடையிலான புறநகர் ரயில் சேவை இன்றும் பாதிக்கப்பட்டுள்ளது.


இந்த ரயில் பாதையில் இரு மார்க்கத்திலும் நேற்று போலவே இன்றும் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை ரயில் சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்தப் பாதையில் உள்ள ரயில் நிலையங்களில் பராமரிப்பு பணி நடைபெறுவதால் ரயில் சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.




சென்னை  தாம்பரம் முதல் கடற்கரை வரையிலான புறநகர் மின்சார ரயில் சேவை  நேற்று பகல் 11.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை ரத்து செய்யப்பட்டிருந்தது.  தாம்பரம்,  கோடம்பாக்கம் ரயில் நிலையங்களில் பராமரிப்பு பணி நடைபெறுவதால் ரயில் சேவை பாதிப்பு என ரயில்வே நிர்வாகம் தெரிவித்திருந்தது.


இதனால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி இருந்தனர். விடுமுறை நாளில் வெளியில் செல்லலாம் என்று வந்த மக்களுக்கு பெரும் பாதிப்பை இது ஏற்படுத்தியது. 


இந்த நிலையில் இன்றும் அதேபோல பிற்பகல் 3 மணி வரை ரயில் சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னை தாம்பரம் வந்த பயணிகள் அவதிக்குள்ளாகினா். கடந்த 4 நாடகள் விடுமுறை விடப்பட்டிருந்த நிலையில், நாளை பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால் வெளியூர்களில் இருந்து இன்று காலை சென்னை வந்த பயணிகள் ரயில்கள் இல்லாததால் பெரும் சிரமத்திற்குள்ளாகினர். 


ரயில்கள் இல்லாததால் பஸ்களை நாட வேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டனர். ஆனால் பஸ்களிலோ  கூட்டம் ஆலைமோதியதால் தாம்பரம் பஸ் நிலையத்தில் பெரும் கூட்டம் காணப்பட்டது. போதிய பஸ்களும் இல்லை என்பதால் மக்கள் பெரும் அவஸ்தைக்குள்ளாகி விட்டனர். ஆட்டோக்களிலும் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டதால் மக்கள் அதிருப்தி அடைந்தனர்.


விடுமுறை நாளில் ரயில்வே நிர்வாகம் இதுபோல பராமரிப்பு பணியை மேற்கொள்வதை எதிர்காலத்தில் தவிர்க்க வேண்டும் என்று மக்கள் குமுறல் வெளியிட்டுள்ளனர்.