13 மணி நேரம் நான் ஸ்டாப் பயணம்.. கிளம்பிய இடத்திற்கே திரும்பி வந்த துபாய் விமானம்!

Su.tha Arivalagan
Jan 31, 2023,01:00 PM IST

துபாய்: துபாயிலிருந்து நியூசிலாந்தின் ஆக்லாந்து நகருக்குச் சென்ற எமிரேட்ஸ் விமானம், 13 மணி நேர பயணத்திற்குப் பின்னர் மீண்டும் துபாய்க்கே வந்து தரையிறங்கியது.


இதுவரை உலக அளவில் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது மிக மிக அரிதானது. அந்த வரலாற்றைப் படைத்து விட்டது இந்த எமிரேட்ஸ் விமானம். வெள்ளிக்கிழமை காலையில் துபாயிலிருந்து எமிரேட்ஸ் விமானம் ஆக்லாந்து புறப்பட்டது. ஆனால் வழியிலேயே ஆக்லாந்தில்  பலத்த வெள்ளம் காரணமாக விமான நிலையம் மூடப்பட்டிருந்த தகவல் கிடைத்தது. 


இதனால் விமானம் ஆக்லாந்து செல்லாமல் பாதி வழியிலேயே திரும்பி மீண்டும் துபாய்க்கே கொண்டு வந்து தரையிறக்கினர். வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிவாக்கில் கிளம்பிய விமானம், கிட்டத்தட்ட 13 மணி நேர பயணத்திற்குப் பின்னர் சனிக்கிழமை நள்ளிரவு வாக்கில் மீண்டும் துபாயில் தரையிறங்கியது.


கன மழை மற்றும் வெள்ளம் காரணமாக ஆக்லாந்து சர்வதேச விமான நிலையம் சேதமடைந்திருந்தது. இதனால் சில நாட்களுக்கு விமானங்களை அங்கு இயக்க முடியாத நிலையும் ஏற்பட்டது. இதனால்தான் விமான நிலையத்தை மூடினர். நேற்று முதல்தான் அங்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.