மீண்டும் மீண்டுமா.. மதுரையில் பள்ளிகளை தொடர்ந்து... 4 ஸ்டார் ஹோட்டல்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

Meenakshi
Oct 02, 2024,04:07 PM IST

மதுரை: மதுரையில் 4 தங்கும் விடுதிகளுக்கு இ மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.


மதுரை கடந்த 30ம் தேதி  நரிமேடு பகுதியில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிக்கு தொலைபேசி மூலமாகவும், அனுப்பானடியில் இயங்கி வரும்  வேலம்மாள் போதி கேம்பஸ் பள்ளி, சிந்தாமணி பகுதியில் இயங்கி வரும் ஜீவனா பள்ளி, நாகமலை, பொன்மேனி பகுதியில் உள்ள பள்ளிகள்  உட்பட 8 பள்ளிகளுக்கு இமெயில் மூலமாகவும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இந்த வெடிகுண்டு மிரட்டலால், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் என அனைத்து தரப்பினர்களும் பதற்றம் அடைந்தனர்.



போலீசார் வெடி குண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட பள்ளிகளில் மோப்ப நாய்களுடன் சோதனை செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்ததிலும், சோதனை நடத்தியதிலும் எந்த ஒரு வெடிகுண்டும் கிடைக்கவில்லை. வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என தற்போது கண்டறியப்பட்டது. மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனை தொடர்ந்து, இன்று மதுரையில்  செயல்பட்டு வரும் நட்டத்திர தங்கும் விடுதிகளுக்கு மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மதுரை சின்ன சொக்கிகுளம் பகுதியில் உள்ள ஜேசி ரெஸிடென்ஸி, விமான நிலைய சாலையில் உள்ள அமீகா ஹோட்டல், பெரியார் பேருந்து நிலையம் அருகே  உள்ள மதுரை ரெஸிடென்ஸி, காளவாசல் அருகே உள்ள ஜெர்மானுஸ் ஹோட்டல் உள்ளிட்ட 4 நட்சத்திர ஓட்டல்களுக்கு இமெயில் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இந்த 4 ஹோட்டல்களிலும் உடனடியாக வெடிகுண்டு  நிபுணர்கள சென்று அறை அறையாக சோதனை செய்தனர். சோதனையின் இறுதியில் இது வெறும் புரளி என்பது தெரியவந்தது.

மதுரை, சென்னை மட்டும் இன்றி இந்தியா முழுவதிலும் உள்ள பிரபல பள்ளிகள், ஹோட்டல்கள், விமான நிலையங்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்கள்  என்று பல இடங்களில் தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருவது தொடர் கைதயாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

புலி வருது புலி வருது என்று கூறி வருபவர்களால், ஒரு நாள் புலி வரும். அன்று யாரும் கண்டுகொல்லாத அவலநிலை ஏற்பட்டாலும் ஆச்சிரியப்படுவதற்கு இல்லை என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்