டிவிட்டர் நஷ்டத்துல ஓடுது.. விளம்பரம் நின்னு போச்சு.. குண்டைப் போடும் எலான் மஸ்க்!

Su.tha Arivalagan
Jul 16, 2023,12:24 PM IST
கலிபோர்னியா: டிவிட்டர் நிறுவனம் நஷ்டத்தில் ஓடுவதாகவும், விளம்பரங்கள் மூலம் வரும் வருவாய் பாதியாக குறைந்து போய் விட்டதாகவும் அதன்  உரிமையாளர் எலான் மஸ்க் கூறியுள்ளார்.

எலான் மஸ்க் வருவதற்கு முன்பு டிவிட்டரின் முகமே வேறாக இருந்தது. ஆனால் மஸ்க் டிவிட்டரை வாங்கியது முதல் ஒரே குழப்பமாகத்தான் கம்பெனி போய்க் கொண்டிருக்கிறது.  முதலில் பல ஆயிரம் பேரை வேலையை விட்டு அதிரடியாக நீக்கினார். பிறகு ப்ளூ டிக்குக்கு காசு கொடுக்கணும் என்றார்.. பிறகு டிவீட் பார்வைக் கட்டுப்பாட்டைக் கொண்டு வந்தார். தொடர்ந்து அவர் செய்து வரும் மாற்றங்களுக்கு வரவேற்பை விட எதிர்ப்புகளே அதிகம் வருகின்றன.

இந்த நிலையில்தான் மெட்டா நிறுவனம் புதிதாக திரெட்ஸ் என்ற ஆப்பை கொண்டு வந்துள்ளது.இதற்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. பலரும் திரெட்ஸ் பக்கம் போய்க் கொண்டுள்ளனர். ஆனால் டிவிட்டர் போல இது கையாள எளிதாக இல்லை என்ற அதிருப்தியும் இருக்கிறது.



இந்த நிலையில்தான் டிவிட்டர் நிறுவனம் நஷ்டத்தை சந்தித்துள்ளதாக கூறியுள்ளார் எலான் மஸ்க்.  இதுகுறித்து அவர் கூறுகையில், நாங்கள் இன்னும் நஷ்டத்தில்தான் இருக்கிறோம். விளம்பர வருவாய் பாதியாக குறைந்து விட்டது. கடன் சுமையும் அதிகரித்துள்ளது. அடுத்து ஏதாவது செய்யும் முன்பு வருவாயை அதிகரிக்க வேண்டியது அவசியம் என்று கூறியுள்ளார் எலான் மஸ்க்.

2023ம் ஆண்டு டிவிட்டரின் வருமானம் 3 பில்லியன் டாலருக்கும் குறைவாகவே இருக்கும் என்று ஒரு கணக்கு சொல்கிறது. இது கடந்த 2022ம் ஆண்டு வருமானத்தை விட மூன்றில் ஒரு பங்கு குறைவாகும்.

எலான் மஸ்க் குண்டக்க மண்டக்க செயல்பட்டு வருவதால்தான் டிவிட்டருக்கு விளம்பரங்கள் வருவது குறைந்து போய் விட்டதாக  சொல்லப்படுகிறது.  அவர் திருந்தினால்தான்.. டிவிட்டருக்கும் பழைய வருவாய் திரும்பி வரும் என்றும் சொல்கிறார்கள்.