அச்சச்சோ "எக்ஸ் மெயில்" வரப் போகுதா.. எலான் மஸ்க் பயங்கரமான ஆளாச்சே.. ஜிமெயில் என்னாகுமோ?!

Su.tha Arivalagan
Feb 24, 2024,05:49 PM IST

டெல்லி: எக்ஸ் தளத்திலிருந்து புதிதாக ஒரு "பேபி" வரப் போகிறது... ஆமாங்க, இமெயில் வசதியை கொண்டு வரப் போகிறாராம் எலான் மஸ்க். அதற்கு எக்ஸ் மெயில் என்றும் பெயர் சூட்டியுள்ளனர். எப்போது இது வரும் என்று தெரியவில்லை. ஆனால் விரைவில் வரும் என்று சுட்டிக் காட்டியுள்ளார் எக்ஸ் உரிமையாளர் எலான் மஸ்க்.


எக்ஸ் ஆப்புடன் இணைந்து இந்த இமெயில் வசதி ஏற்படுத்தப்படும் என்று தகவல்கள் கூறுகின்றன. இந்த மெயிலின் வருகையால் ஜிமெயிலுக்கு எந்த அளவுக்குப் பாதிப்பு ஏற்படும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.




"எங்களது அடுத்த படைப்பு எக்ஸ் மெயில்" என்று எலான் மஸ்க் அறிவித்துள்ளது, சமூக வலைதள உலகில் பெரும் எதிர்பார்ப்பையும் ஆர்வத்தையும் ஏற்படுத்தியுள்ளது.  எக்ஸ் மெயில் வருகை ஜிமெயிலுக்கு கடும் நெருக்கடியைத் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


எக்ஸ் மெயில் எப்போது வரும் என்று எக்ஸ் தளத்தின் பாதுகாப்பு பொறியியல் பிரிவைச் சேர்ந்த நாதன் மெக்கிராடி என்பவர் எக்ஸ் தளத்திலேயே மஸ்க்கிடம் கேட்டிருந்தார். அதற்கு மஸ்க், இட்ஸ் கமிங் என்று பதில் கொடுத்திருந்தார். தொழில்நுட்ப ரீதியிலான பணிகள் தற்போது வேகம் பிடித்திருப்பதாகவும், விரைவில் எக்ஸ் மெயில் வெளியாகும் என்று கருதப்படுகிறது.


ஒரு காலத்தில் பல இமெயில்கள் இருந்தன. அதில் ஹாட்மெயில் ரொம்பப் பாப்புலராக இருந்தது. அதன் பின்னர் கூகுள் தனது ஜிமெயிலை அறிமுகப்படுத்தியதும் ஒட்டுமொத்த மெயில் உலகமே மாறிப் போனது. இன்று இமெயில் உலகில் கிட்டத்தட்ட "மோனோபாலி" ஆக இருக்கிறது  ஜிமெயில். நாளை எக்ஸ் மெயில் வந்து ஜிமெயிலின் அஸ்திவாரத்தை ஆட்டிப் பார்க்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


இப்படித்தான் டிவிட்டருக்கு கடும் நெருக்கடியைக் கொடுக்கும் வகையில் பேஸ்புக் நிறுவனம் தனது திரெட்ஸ் ஆப்பை அறிமுகப்படுத்தியது. படு வேகத்தில் பலரும் திரெட்ஸுக்கு மாறினார்கள். ஆனால் டிவிட்டருக்கு பெரிய பாதிப்பு ஏற்படவில்லை.  திரெட்ஸ் டவுன்லோட் செய்தவர்களில் முக்கால்வாசிப் பேர் அதை பயன்படுத்துவதில்லை என்று கூறப்படுகிறது.


எக்ஸ் மெயிலும் இதுபோல இருக்குமா அல்லது ஜிமெயிலின் தலையெழுத்தை தீர்மானிக்குமா என்பதை காத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


ஜிமெயிலில் கிட்டத்தட்ட 18.8 பில்லியன் பயனாளர்கள் உள்ளனர். உலகின் நம்பர் 1 இமெயில் இதுதான். ஜிமெயில் இல்லாமல் ஒருவரின் நாள் ஆரம்பிப்பதும் இல்லை, முடிவதும் இல்லை. அந்த அளவுக்கு வாழ்க்கையில் ஒரு அங்கமாக மாறிப் போயுள்ளது ஜிமெயில்.


எலான் மஸ்க்கைப் பொறுத்தவரை  அனைத்து விஷயங்களையும் கொண்ட ஒரு அற்புதமான தளமாக எக்ஸ் இருக்க வேண்டும் என்பதே எனது கனவு.. என்று முன்பு கூறியிருந்தார். தற்போது அந்த மாற்றங்களை அவர் ஒவ்வொன்றாக கொண்டு வந்து கொண்டிருக்கிறார்.


இதற்கிடையே,  ஆகஸ்ட் 1ம் தேதியுடன் ஜிமெயில் தனது சேவையை நிறுத்திக் கொள்ளப் போவதாக ஒரு தகவல் பரபரப்பாக உலா வருகிறது. இந்த நிலையில்தான் எக்ஸ் மெயில் குறித்த அறிவிப்பும் வெளியாகியுள்ளது, பலரையும் மிக்ஸட் உணர்வுகளுக்குள் தள்ளியுள்ளது.