2025ம் ஆண்டின் முதல் அதிரடி.. தடாலடியாக தனது பெயரை மாற்றினார் எலான் மஸ்க்!
கலிபோர்னியா: எக்ஸ் தளத்தின் உரிமையாளரும், டெஸ்லா நிறுவனருமான எலான் மஸ்க் தனது பெயரை மாற்றியுள்ளார். 2025ம் ஆண்டின் முதல் அதிரடி நிகழ்வாக இது பார்க்கப்படுகிறது.
2025ம் ஆண்டு பிறந்துள்ளது. உலகம் முழுவதும் புது வருஷத்தைக் கொண்டாடி வருகிறது. இந்த வருஷம் இப்படி இருக்கணும், அப்படி இருக்கணும், இதைச் செய்யக் கூடாது, அதைச் செய்யக் கூடாது என்று பலரும் நேற்று நடு ராத்திரியில் தீர்மானம் எடுத்துக் கொண்டனர். ஆனால் இன்று காலை முதல்தான் அவர்கள் அதன்படி நடக்க ஆரம்பிக்கிறார்களா என்பதைப் பார்க்க வேண்டும்.
நாமெல்லாம் இப்படிக்கா போனால், நம்ம எலான் மஸ்க் எப்படிக்கா போயிருக்கார் பாருங்க.. தனது பெயரை தடாலடியாக மாற்றி விட்டார் எலான் மஸ்க்.. அதாவது தனது பெயரை கெகியஸ் மேக்ஸிமஸ் என்று மாற்றியுள்ளார் எலான் மஸ்க். அமெரிக்காவைப் பொறுத்தவரை இன்றுதான் அவர்களுக்குப் புத்தாண்டு பிறக்கிறது. எனவே புத்தாண்டுக்கு முன்பாகவே தனது பெயரை மாற்றியுள்ளார் எலான் மஸ்க். புது வருஷம் பிறக்கும்போது அவர் கெகியஸ் மேக்ஸிமஸ் என்ற பெயரில்தான் இருப்பார் என்பது சுவாரஸ்யமானது.
தனது பெயர் மாற்றத்தை எக்ஸ் தளத்திலும் இடம் பெற வைத்துள்ளார் மஸ்க். உலகிலேயே மிகப் பெரிய கோடீஸ்வரரா எலான் மஸ்க்.. அதாவது கெகியஸ் மேக்ஸிமஸ், தனது எக்ஸ் தளத்தில் 210 மில்லியன் பாலோயர்களை வைத்துள்ளார். 2022ம் ஆண்டு முதல் இவர் எக்ஸ் தளத்தின் உரிமையாளராக செயல்பட்டு வருகிறார். அவர் வந்த பின்னர் டிவிட்டர் என்ற பெயரை எக்ஸ் என்று மாற்றினார். அதில் ஏகப்பட்ட மாற்றங்களையும் கொண்டு வந்தார். இப்போது தனது பெயரையே மாற்றி விட்டார்.
அத்தோடு இல்லாமல் தனது டிபி புகைப்படத்தையும் கவச உடை அணிந்த தவளை வீரன் படத்தை வைத்துள்ளார் நம்ம மேக்ஸிமஸ் என்று அழைக்கப்படும் எலான் மஸ்க்.
ஏன் இந்த பெயர் மாற்றம் என்பது குறித்து இதுவரை விளக்கம் அளிக்கவில்லை எலான் மஸ்க். அதேசமயம், இதற்கும் ஏதாவது கதை கையில் வைத்திருப்பார்.. சொல்லுவார்.. பொறுத்திருந்து கேட்போம்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்