டெஸ்லாவில் நஷ்டம்.. எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு சுருங்கிப் போச்சு!

Su.tha Arivalagan
Oct 20, 2023,08:57 AM IST

கலிபோர்னியா: டெஸ்லாவின் வருமானம் அடி வாங்கியுள்ளதால், எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு குறைந்துள்ளது.


உலகின் நம்பர் 1 கோடீஸ்வரராக வலம் வருகிறார் எலான் மஸ்க். அவரது சொத்து மதிப்பு 209.6  பில்லியன் டாலர் ஆகும். டெஸ்லாவிலிருந்துதான் இவருக்குப் பெருமளவில் வருமானம் வருகிறது. டிவிட்டரின் உரிமையாளராகவும் இவர் இருக்கிறார்.


டெஸ்லாவின் வருவாய் தற்போது குறைந்துள்ளது. அதாவது 9.3 சதவீத அளவுக்கு வருவாய் குறைந்துள்ளது. இதனால் எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பும் 16.1 பில்லியன் டாலர் குறைந்துள்ளது.




மின்சார கார்களைத் தயாரிக்கும் நிறுவனம்தான் டெஸ்லா. இந்த ஆண்டின் முதல் காலாண்டில் டெஸ்லா 4 லட்சத்து 35  ஆயிரத்து 59 கார்களை விற்றுள்ளது. இது கடந்த நான்கு ஆண்டுகளில்  மிகவும் குறைவாகும்.


2023 தொடக்கத்தில் டெஸ்லா பங்குகள் மதிப்பு அதிகரித்ததால் எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பும் 70 பில்லியன் டாலர்கள் கூடியது. இதன் மூலம் அவர் சொத்து மதிப்பில் 2வது இடத்தில் இருந்த அவர் மீண்டும் முதலிடத்தைப் பிடித்தார் என்பது நினைவிருக்கலாம்.


தற்போது டெஸ்லா சரிவிலிருந்து மீளும் நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளது. இந்த வருட இறுதிக்குள் 1.8 மில்லியன் வாடிக்கையாளர்களை சேர்க்கும் திட்டத்தை அது கையில் எடுத்துள்ளது. உலக அளவில் அதிக மதிப்பும், கிராக்கியும் கொண்ட காராக டெஸ்லா உள்ளது. இதை மேலும் வலிமைப்படுத்த தற்போது அது உறுதி பூண்டுள்ளது.


இந்தியாவுக்கு டெஸ்லா வரும்போது அதன் அதிர்ஷ்டம் பல மடங்காக அதிகரிக்கும் என்றும் நம்பப்படுகிறது.