தெலங்கானாவின் முதல்வர் ரேஸ்.. ராகுல் காந்தியின் சாய்ஸ் இவர்தான்.. யார் இவர்னு தெரியுமா?

Su.tha Arivalagan
Dec 03, 2023,05:59 PM IST

ஹைதராபாத்: தெலங்கானா மாநில காங்கிரஸ் தலைவராக இருந்து, அக்கட்சிக்கு மிகப் பெரிய வெற்றியைத் தேடிக் கொடுத்துள்ள ரேவந்த் ரெட்டிதான், அந்த மாநிலத்தின் அடுத்த முதல்வர் என்று கூறப்படுகிறது. அவருக்கு ராகுல் காந்தியின் ஆதரவும் இருக்கிறது. 


கர்நாடகத்தில் எப்படி டி.கே.சிவக்குமார் அதிரடி காட்டி பாஜகவிடமிருந்து மாநிலத்தை காங்கிரஸ் பக்கம் கட்டித் தூக்கி வந்தாரோ அதேபோல இப்போது தெலங்கானாவை, பி.ஆர்.எஸ். கட்சியிடமிருந்து மீட்டுள்ளார் ரேவந்த் ரெட்டி.


பிஆர்எஸ் கட்சிக்கு எதிரான மக்களின் உணர்வுகளை அட்டகாசமாக ஒருங்கிணைத்து எதிர்ப்பாளர்களை ஒன்றாக இணைத்து பிரமாதமான வெற்றியை காங்கிரஸ் கட்சிக்குத் தேடிக் கொடுத்துள்ளார் ரேவந்த் ரெட்டி. 




யார் இந்த ரேவந்த் ரெட்டி?


மிகப் பெரிய அரசியல் அனுபவம் கொண்டவர் ரேவந்த் ரெட்டி. அரசியல் குடும்பத்தையும் சேர்ந்தவர்.. இப்போதைய தலைமுறைக்கு ஜெயபால் ரெட்டி என்ற காங்கிரஸ் தலைவரை தெரிந்திருக்காது. ஒருங்கிணைந்த ஆந்திரப் பிரதேசத்தில் மிகப் பெரிய காங்கிரஸ் ஆளுமையாக திகழ்ந்தவர்தான் ஜெயபால் ரெட்டி. மிகச் சிறந்த பேச்சாளர், மிகச் சிறந்த நாடாளுமன்றவாதி. மத்திய அமைச்சராக பல முறை இருந்துள்ளார்.


காங்கிரஸ் கட்சியின் எலைட் தலைவர்களில் ஒருவராக திகழ்ந்தவர். அதேசமயம், அடித்தட்டு மக்கள் வரைக்கும் செல்வாக்கு நிறைந்த தலைவராகவும் இருந்தவர். மிகுந்த மன தைரியம் உடையவர்.. போலியோ பாதிப்புக்குள்ளானவர் ஜெயபால் ரெட்டி. ஆனால் யாருடைய உதவியையும் எதிர்பார்க்க மாட்டார். உதவி செய்வதாக யாராவது வந்தால் கூட நிராகரித்து விடுவார். அத்தகைய தன்னம்பிக்கை மிக்க தலைவர். அவருடைய உறவினர்தான் ரேவந்த் ரெட்டி.


ரேவந்த் ரெட்டியின் ஆரம்ப கால அரசியல் பாஜக சார்பானதாகவே இருந்தது. மாணவப் பருவத்தில் இவர் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தில் இணைந்து செயல்பட்டார். பின்னர் தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்தார். 2 முறை எம்எல்ஏவாக இருந்துள்ளார். அதன் பின்னர் 2017ம் ஆண்டு காங்கிரஸில் இணைந்தார். படு வேகமாக கட்சியில் முன்னேறி தெலங்கானா மாநிலத் தலைவர் பதவியை அடைந்தார்.


தெலங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் எழுச்சிக்கு ரேவந்த் ரெட்டியின் வருகையும், அவரது உழைப்பும்தான் முக்கியக் காரணம். காங்கிரஸ் கட்சியின் முகத்தையே மாற்றியுள்ளார். 56 வயதாகும் ரேவந்த் ரெட்டி மிகவும் வெளிப்படையானவர். மனதில் தோன்றுவதை பேசி விடுவார். காங்கிரஸில் இருந்தாலும் கூட தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவைப் பாராட்டுவார். கே.சி.ஆரை கடுமையாக விமர்சிப்பார். அவரது மகனை மேனேஜ்மென்ட் கோட்டாவில் வந்த தலைவர் என்று கடுமையாக விமர்சித்தவர் ரேவந்த் ரெட்டி.


தற்போது தெலங்கானாவில்   காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்துள்ள நிலையில் முதல்வராக ரேவந்த் ரெட்டி பொறுப்பேற்பார் என்று தெரிகிறது. அப்படி பதவியேற்றார், தெலங்கானா மாநிலத்தின் முதல் காங்கிரஸ் முதல்வர் என்ற பெருமை அவருக்குக் கிடைக்கும்.



மத்தியப் பிரதேசம்: ஜஸ்ட் மிஸ் ஆனது கமல்நாத்தின் "Revenge".. பாஜகவுக்கு 6வது "லட்டு"!