ம.பியை தக்க வைத்து.. ராஜஸ்தானை தட்டித் தூக்கிய பாஜக.. காங்கிரஸுக்கு பெருத்த ஏமாற்றம்!

Su.tha Arivalagan
Dec 03, 2023,05:59 PM IST
போபால்/ஜெய்ப்பூர்: கருத்துக் கணிப்புகளுக்கு முற்றிலும் எதிர்மாறான ஆச்சரியத்தை மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் நிகழ்த்திக் காட்டியுள்ளது பாஜக. மத்தியப் பிரதேசத்தில் ஆட்சி மாறும் என்று கணிக்கப்பட்ட நிலையில் மீண்டும் ஒரு மாயாஜாலத்தை நிகழ்த்திக் காட்டியுள்ளது பாஜக. அதேபோல ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை அது புறம் தள்ளி ஆட்சியைக் கைப்பற்றுகிறது.

மத்தியப் பிரதேசத்தில் சிவராஜ் சிங் செளகான் தலைமையில் 3வது முறையாக பாஜக ஆட்சி அங்கு நடந்து வருகிறது. இதில் முதல் இரு ஆட்சிகளும் மக்களின் நேரடி ஆதரவுடன் பாஜக ஆட்சிக்கு வந்தது. ஆனால் 3வது ஆட்சி, காங்கிரஸ் கட்சி ஆட்சியை கவிழ்த்து விட்டு வந்த ஆட்சியாகும். காங்கிரஸ் கட்சியில் இருந்து பாஜகவுக்கு வந்த ஜோதிராதித்யா சிந்தியாவின் புண்ணியத்தால் பாஜகவுக்குக் கிடைத்த ஆட்சிதான் செளகானின் 3வது ஆட்சி.

இந்த நிலையில் இந்தத் தேர்தலை பாஜக மிகுந்த நம்பிக்கையுடன் சந்தித்தது. ஆட்சிக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுக்கள், அதிருப்திகள் இருந்தபோதும் கூட செளகான் மிகுந்த நம்பிக்கையுடன் தேர்தலை சந்தித்தார். தீவிரப் பிரசாரமும் செய்தார். திமுக பாணியிலான தேர்தல் வாக்குறுதிகளையும் அவர் அறிவித்தா். குறிப்பாக பெண்களுக்கு மாதாந்திர உதவித் தொகையையும் பாஜக அறிவித்தது. இதுபோன்ற பல்வேறு இலவச அறிவிப்புகளையும் அது வெளியிட்டது.




இது எல்லாம் சேர்ந்து ம.பியில் மீண்டும் பாஜகவுக்கே வெற்றியைத் தேடிக் கொடுத்து விட்டது. காங்கிரஸ் கட்சி போராடித் தோல்வியைத் தழுவியுள்ளது. மிகப் பெரும் வெற்றியை நோக்கி பாஜக போய் விட்டது. காங்கிரஸின் ஆட்சிக் கனவு மீண்டும் ஒரு முறை தகர்ந்து போயுள்ளது.

மறுபக்கம் ராஜஸ்தான்.. இங்கு காங்கிரஸ் தற்போது ஆட்சியில் இருந்து வருகிறது. ஆட்சி மீதும், முதல்வர் அசோக் கெலாட் மீதும் ஏகப்பட்ட அதிருப்திகள் உள்ளன. குறிப்பாக அவருக்கும், இளம் தலைவர் சச்சின் பைலட்டுக்கும் இடையிலான உட்கட்சி மோதல் அக்கட்சிக்கு பெரும் பின்னடைவை கொடுத்து விட்டது. இந்தத் தோல்வியை காங்கிரஸ் கட்சி எதிர்பார்த்திருந்ததும் உண்மைதான். இருப்பினும் பாஜகவுக்கு கடுமையான டப் கொடுத்த பின்னரே பலவீனமடைந்துள்ளது காங்கிரஸ்.

கட்சியினர் ஒற்றுமையாகவும், ஆட்சி மீதான அதிருப்திகளைக் களையும் வகையில் முதல்வரும் செயல்பட்டிருந்தால், ராகுல் காந்தி உள்ளிட்டோரின் கடுமையான உழைப்புக்குப் பலன் கிடைத்திருக்கும். அதை காங்கிரஸ் தவறி விட்டது. ஜோதிராதித்யா சிந்தியா, காங்கிரஸிருந்து விலகி ம.பி.பியில் அக்கட்சிக்கு ஆப்பு வைத்தார்.. ஆனால் சச்சின் பைலட்டோ, உள்ளுக்குள் இருந்து கொண்டே ஆட்சிக்கு வேட்டு வைத்து விட்டார் என்று சொல்லப்படுகிறது. 

காங்கிரஸ் மேலிடம் நிச்சயம் சுய பரிசோதனைக்கு தன்னை உட்படுத்திக் கொள்வது நல்லது. ம.பியில் விரைவில் இளம் தலைவர் தலைமையில் ஆட்சி மாற்றம் எதிர்காலத்தில் ஏற்படலாம். அதற்கேற்ப காங்கிரஸும் இளம் தலைவர்களை வளர்க்க முயல்வது அதன் எதிர்காலத்துக்கு நல்லது. பழைய தலைவர்களை வைத்தே காலம் தள்ளிக் கொண்டிருப்பது நீண்ட காலத்துக்கு அது பயன் தராது.. இதை ராகுல் காந்தி உணர்ந்துள்ளார்.. ஆனால் கட்சியின் சீனியர்களும் அதைப் புரிந்து கொண்டு இளம் தலைமுறைக்கு வாய்ப்பளிக்க வேண்டியது அவசியம்.

இந்த நான்கு மாநிலத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கே அதிக பலன் கிடைத்துள்ளது.   2 மாநிலங்களில் பாஜக ஆட்சியில் அமர்கிறது. தெலங்கானாவை மட்டும் பறி கொடுத்துள்ளது. சட்டிஸ்கர் நிலவரம் இன்னும் தெளிவாகவில்லை.

தெலங்கானா.. ஒரே ஓட்டில்.. கே.சி.ஆர் கட்சிக்கு 2 வேட்டு வைத்த மக்கள்.. இதை எதிர்பார்க்கலையே!