"தேர்தல் பாண்டுகள்".. அடேங்கப்பா.. எவ்வளவு பணம்.. கட்சிகளுக்குப் பாய்ந்த ஆயிரக்கணக்கான கோடிகள்!

Su.tha Arivalagan
Mar 14, 2024,09:44 PM IST

டெல்லி: தேர்தல் பாண்டுகள் மூலமாக கட்சிகள் வாங்கிய பணம் குறித்த விவரத்தை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.


2 செட்டுகளாக இந்த விவரத்தை தனது இணையதளத்தில் அப்லோட் செய்துள்ளது தேர்தல் ஆணையம். ஒரு செட்டில் நிறுவனங்கள், தனி நபர்கள் எவ்வளவு பணம் கொடுத்தனர், எப்போது கொடுத்தனர் என்ற விவரம் உள்ளது. 2வது செட்டில் எந்தக் கட்சிக்கு எவ்வளவு பணம், எப்போது கொடுக்கப்பட்டது என்ற விவரம் உள்ளது.


ஆனால் எந்தக் கட்சிக்கு யார் பணம் கொடுத்தார்கள் என்ற ஒப்பீடு இதில் இல்லை.  இதன் காரணமாக எந்தக் கட்சிக்கு யார் அதிக பணம் கொடுத்தது என்பதை கண்டறிய முடியவில்லை.




சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி இந்த விவரங்களை ஸ்டேட்  பாங்க் ஆப் இந்தியா தேர்தல் ஆணையத்திடம் பென் டிரைவில் போட்டு வழங்கியது. அதை இன்று தனது இணையதளத்தில் தேர்தல் ஆணையம் அப்லோட் செய்துள்ளது.


லாட்டரி மார்ட்டின்  ரூ. 1368 கோடி


லாட்டரி மார்ட்டின் என்று அழைக்கப்படும் மார்ட்டின் மிகப் பெரிய அளவில் தேர்தல் பாண்டுகள் மூலம் நன்கொடை வழங்கியுள்ளார்.  அதாவது ரூ. 1368 கோடி நன்கொடை கொடுத்துள்ளது. அமலாக்கத்துறை விசாரணையில் அவரது பியூச்சரிங் கேமிங் நிறுவனம் உட்படுத்தப்பட்டது நினைவிருக்கலாம்.


இதேபோல மெகா என்ஜீனியரிங் என்ற நிறுவனம் ரூ. 821 கோடி நன்கொடையாக அளித்துள்ளது. 


இந்தக் கட்சி அந்தக் கட்சி என்று இல்லை..  தமிழ்நாட்டின் திமுக, அதிமுக முதல் தேசிய அளவில் பாஜக, காங்கிரஸ், திரினமூல் காங்கிரஸ், சிவசேனா, ராஷ்டிரிய ஜனதாதளம் என  பெரும்பாலான கட்சிகள் தேர்தல் பாண்டுகள் மூலம் பெருமளவில் பணம் பெற்றுள்ளன. இருப்பினும் மத்தியில் ஆளும் கட்சியாக உள்ள பாஜகவுக்கே பெருமளவில் நன்கொடைகள் வந்துள்ளது.