லோக்சபா தேர்தல் தேதி.. வாட்ஸ்ஆப்பில் பரவுவது பொய்ச் செய்தி.. தேர்தல் ஆணையம் விளக்கம்
டெல்லி: லோக்சபா தேர்தல் தேதி என்று கூறி வாட்ஸ் ஆப்பில் பொய்யான செய்தி பரப்பப்படுகிறது. தேர்தல் தேதியை இன்னும் நாங்கள் முடிவு செய்யவில்லை என்று தேர்தல் ஆணையம் தெளிவுபடுத்தியுள்ளது.
நாடாளுமன்றத்திற்கு இந்த ஆண்டு தேர்தல் நடைபெறவுள்ளது. இன்னும் சில மாதங்களில் தேர்தல் வந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலைச் சந்திக்க நாடு முழுவதும் கட்சிகள் மும்முரமாக தயாராகி வருகின்றன.
கூட்டணிகளை இறுதி செய்வது, தொகுதிகளை பங்கிட்டுக் கொள்வது உள்ளிட்டவற்றில் கட்சிகள் மும்முரமாக உள்ளன. தேர்தல் தேதியை முடிவு செய்வதில் தேர்தல் ஆணையமும் பூர்வாங்கப் பணிகளில் ஈடுபட்டுள்ளது. நாடு முழுமைக்கும் மக்களுக்கு எந்த சிக்கலும் வராத வகையில் தேர்தல் தேதி முடிவு செய்யப்படும் என்று தெரிகிறது.
இந்த நிலையில் தேர்தல் தேதி என்று கூறி வாட்ஸ் ஆப்பில் சில வதந்தி வாயர்கள் செய்தி பரப்பி வருகின்றனர். இந்த தேதியில்தான் தேர்தல் நடக்கப் போகிறது என்று அவர்கள் வதந்திகளைப் பரப்பி வருகிறார்கள். அதை தேர்தல் ஆணையம் தற்போது மறுத்துள்ளது.
இதுதொடர்பாக அது வெளியிட்டுள்ள டிவீட்டில், லோக்சபா தேர்தல் தேதி என்று கூறி வாட்ஸ் ஆப்பில் சிலர் போலியான செய்தியை பரப்பி வருகின்றனர். இது போலியான தேதியாகும். தேர்தல் ஆணையம் இன்னும் தேர்தல் தேதியை முடிவு செய்யவில்லை. முறையாக பிரஸ் மீட் வைத்துதான் தேர்தல் தேதியை ஆணையம் அறிவிக்கும் என்று தேர்தல் ஆணையம் தெளிவுபடுத்தியுள்ளது.
வாட்ஸ்ஆப் பல்கலைக்கழக வேந்தர்களே.. துணை வேந்தர்களே.. இணை வேந்தர்களே.. செத்த சும்மா இருக்க முடியாதாப்பா உங்களால.. முறைப்படி தேர்தல் தேதி வரும் வரை மக்களும் எதையும் நம்பாமல் இருப்பது உசிதமானது!