31 கோடி பெண்கள் ஓட்டுப் போட்டுள்ளனர்.. எழுந்து நின்று கை தட்டி பாராட்டிய தேர்தல் ஆணையர்கள்!

Su.tha Arivalagan
Jun 03, 2024,06:11 PM IST

டெல்லி: லோக்சபா தேர்தலில் 31.2 கோடி பெண்கள் வாக்களித்துள்ளனர். இது வரலாற்று சாதனையாகும். அவர்களை நாங்கள் எழுந்து நின்று பாராட்டுகிறோம் என்று தேர்தல் ஆணையர்கள் கூறி எழுந்து நின்று கைதட்டி பாராட்டி கெளரவித்தனர்.


மக்களவைத் தேர்தல் 7  கட்டமாக முடிந்து விட்டது.  நாளை வாக்குகள் எண்ணப்படவுள்ளன. தமிழ்நாட்டில் மிக மிக அமைதியாக வாக்குப் பதிவு நடந்து முடிந்தது. மற்ற மாநிலங்களில் ஆங்காங்கே கலவரம், அடிதடி, வாக்கு மையங்கள் சூறையாடுதல் உள்ளிட்டவை நடைபெற்றன.




இந்தநிலையில் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தலைமையில் தேர்தல் ஆணையர்கள், தேர்தல் ஆணைய அதிகாரிகள் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் கூறுகையில், நமது தேர்தல் மிகச் சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. 7 கட்டமாக தேர்தலை மிகச் சிறப்பாக நடத்தி முடித்துள்ளோம். இதில் உலக சாதனையும் படைத்துள்ளோம். அதாவது 64.2 கோடி வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். 


உலக அளவில் இது மிகப் பெரிய சாதனையாகும். மொத்த ஜி7 நாடுகளின் வாக்காளர்களையும் சேர்த்தால் வாக்களித்த நமது வாக்காளர்களின் எண்ணிக்கை ஒன்றரை மடங்கு அதிகமாகும். அதேபோல ஐரோப்பிய யூனியனில் உள்ள 27 நாடுகளின் வாக்காளர்களை விட இது 2.5 மடங்கு அதிகமாகும்.


தேர்தலில் வாக்களித்தவர்களில் 31.2 கோடி பேர் பெண்கள் ஆவர். இதுவும் ஒரு வரலாற்று சாதனையாகும். இந்த அளவுக்கு இதுவரை வாக்களித்ததில்லை என்று கூறிய பின்னர் அனைத்து தேர்தல் ஆணையர்களும் எழுந்து நின்று பெண் வாக்காளர்களைப் பாராட்டிக் கெளரவித்தனர்.