ஒரு சீட்டில் போட்டியிடுவதால் மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் கிடையாது - தேர்தல் ஆணையம் அறிவிப்பு
சென்னை: மதிமுகவுக்கு பம்பரம் சின்னத்தை ஒதுக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதிமுக ஆரம்பித்தது முதலே பம்பரம் சின்னத்தில்தான் போட்டியிட்டு வருகிறது. இந்த நிலையில் நடப்பு நாடாளுமன்றத் தேர்தலிலும் தங்களுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்குமாறு கோரியிருந்தது அக்கட்சி.. ஆனால் நேற்று வரை அதில் எந்த முடிவையும் எடுக்காமல் இருந்தது தேர்தல் ஆணையம். இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகியது மதிமுக. உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து இன்று காலை 9 மணிக்குள் சின்னம் குறித்து முடிவெடுப்போம் என்று கூறியது தேர்தல் ஆணையம்.
இந்த நிலையில் இன்று காலை பம்பரம் சின்னம் தர முடியாது என்று தேர்தல் ஆணையம் கூறி விட்டது. இதனால் மதிமுகவினர் மட்டுமல்லாமல் மொத்த அரசியல் கட்சியினரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சமீபத்தில் சின்னம் மறுக்கப்பட்ட 2வது முக்கியக் கட்சியாக மதிமுக உருவெடுத்துள்ளது. ஏற்கனவே நாம் தமிழர் கட்சிக்கும் கரும்பு விவசாயி சின்னத்தை தர தேர்தல் ஆணையம் மறுத்து விட்டது என்பது நினைவிருக்கலாம்.
குறைந்தது 2 தொகுதிகளில் போட்டியிட்டால்தான் கேட்கும் சின்னம் ஒதுக்கீடு செய்யப்படும் என்று தேர்தல் ஆணைய விதிமுறையில் உள்ளதாம். ஆனால் நாம் தமிழர் கட்சிக்கு இந்த விதிமுறைப்படி அவர்கள் கேட்ட சின்னம் ஒதுக்கப்படாதது ஏற்கனவே சர்ச்சையைக் கிளப்பிய நிலையில் தற்போது மதிமுகவுக்கு சின்னம் தர மறுத்துள்ளது தேர்தல் ஆணையம்.
இந்த விவகாரம் குறித்து மதிமுக வேட்பாளர் துரை வைகோ கூறுகையில், தேர்தல் ஆணையத்தை பயன்படுத்தி பாஜக இப்படி சின்னங்களை முடக்குகிறது. நாம் தமிழர் கட்சிக்கும் இப்படித்தான் முடக்கினானார்கள். அவர்களுக்கு சாதகம் இல்லாத கட்சிகளுக்கு சின்னம் வழங்குவதில் பாரபட்சம் காட்டுகின்றனர். இதுகுறித்து கோர்ட்டை அணுகி முறையிடுவோம். பம்பரம் கிடைக்காவிட்டால் வேறு சின்னத்தில் போட்டியிடுவோம் என்று கூறினார் துரை வைகோ.
இதற்கிடையே, சின்னம் ஒதுக்கீடு கோரி மதிமுக தாக்கல் செய்துள்ள வழக்கில் இன்று பிற்பகல் விசாரணை நடைபெறவுள்ளது.