விசிகவுக்கு பானை.. ஓ.பன்னீர் செல்வம், நடிகர் மன்சூர் அலிகானுக்கு பலாப்பழம்.. சின்னங்களில் சுவாரஸ்யம்

Manjula Devi
Mar 30, 2024,08:44 PM IST

சென்னை: திமுக கூட்டணியில் சிதம்பரம் தனி மற்றும் விழுப்புரம் தனி தொகுதியில் போட்டியிடும் விசிகவுக்கு பானை சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  அதேபோல வாளி சின்னம் கேட்ட முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு பலாப்பழ சின்னம் வழங்கப்பட்டது. நடிகர் மன்சூர் அலிகானுக்கும் அதே பலாப்பழம் சின்னமே கிடைத்துள்ளது.


கடந்த நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலின் போது விசிக பானை சின்னத்தில் போட்டியிட்டது. பானை சின்னத்தில் போட்டியிட்டு நான்கு எம்எல்ஏக்களையும், ஒரு எம்பியையும் வைத்துள்ளது விசிக. இந்த நிலையில் தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெற உள்ள லோக்சபா தேர்தலில் தேர்தல் ஆணையம் விசிகவிற்கு முதலில் பானை சின்னம் ஒதுக்கவில்லை. இதனால் அவர்கள் நீதிமன்றத்தை நாடி வந்தனர். இதனை தொடர்ந்து அக்கட்சி சார்பாக பல சட்டப் போராட்டங்கள் நடத்தினர். 


இந்த நிலையில் தங்களுக்கு பானை சின்னம் கிடைக்குமா.. கிடைக்காதா..என்ற பெரும் எதிர்பார்ப்புடன்  விடுதலை சிறுத்தைகள் கட்சி இருந்து வந்தது. திமுக கூட்டணியில் விசிக இடம்பெற்றுள்ளது. இதற்கு விழுப்புரம் மற்றும் சிதம்பரம் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளன. விழுப்புரம் தனி தொகுதியில் ரவிக்குமாரும், சிதம்பரம் தனி தொகுதியில் விசிக தலைவர் திருமாவளவனும் போட்டியிடுகின்றனர்.




விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் 31 பேர் மனுதாக்கல் செய்திருந்தனர். இதில் ஒரு வேட்பாளரின் வேட்பு மனு மட்டும் வாபஸ் பெறப்பட்டது. இதனைத் தொடர்ந்து விசிக, பாமக, திமுக, என மொத்தம் 17 பேர் தேர்தல் களத்தில் உள்ளனர். இங்கு டி. ரவிக்குமாருக்கு பானை சின்னம் கிடைத்துள்ளது. அந்த சின்னத்தை வேறு யாரும் கேட்காததால் பானையே அவருக்குக் கிடைத்தது. கடந்த முறை உதயசூரியன் சின்னத்தில் அவர் போட்டியிட்டிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.


அதேபோல சிதம்பரம் தனி தொகுதியிலும் விசிக தலைவர் தொல். திருமாவளவனுக்கு பானை சின்னம் கிடைத்துள்ளது. கடந்த தேர்தலிலும் இதே பானை சின்னத்தில்தான் அவர் போட்டியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


இது பற்றி விசிக தலைவர் திருமாவளவன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், திட்டமிட்டே தேர்தல் ஆணையம் விசிகவுக்கு பானை சின்னம் கொடுக்க மறுத்து விட்டது. ஆளுங்கட்சியான பாஜகவுக்கு சாதகமாக தேர்தல் ஆணையம் செயல்படுகிறது. சுயேச்சையாக போட்டியிடும் எங்களுக்கு இன்று நாங்கள் கேட்ட பானை சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. 


விழுப்புரம் மற்றும் சிதம்பரம் தொகுதியில் எங்களைத் தவிர வேறு யாரும் இந்த சின்னம் வேண்டும் என கோரவில்லை. பானை சின்னம் ஒதுக்கிய தேர்தல் ஆணையத்திற்கு எங்கள் நன்றியை உரித்தாக்குகிறேன்.


மநீம தலைவர் கமல்ஹாசன் அவர்கள் அரியலூரில் பானை சின்னத்திற்கு வாக்கு கேட்டு பிரச்சாரம் செய்ய இருக்கிறார். ஏப்ரல் 6ஆம் தேதி முதல்வர் முக ஸ்டாலின், சிதம்பரம் மற்றும் மயிலாடுதுறையில் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, அங்கு நடைபெறும் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு வாக்கு சேகரிக்க உள்ளார். 


திமுக கூட்டணிக்கு மக்களிடம் பேராதரவு நிலவி வருகிறது. கடந்த தேர்தலில் 40க்கு 39 இடங்களில் திமுக கூட்டணி வெற்றி பெற்றது. ஆனால் தற்போது நடைபெற உள்ள தேர்தலில் 40க்கு 40 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெறும் என்பது உறுதி என்றார் அவர்.


ஓ.பி.எஸ்ஸுக்கு வந்த சின்ன சிக்கல்!




மறுபக்கம் ராமநாதபுரம் தொகுதியில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வாளி சின்னத்தைக் கேட்டிருந்தார். ஆனால் அதே சின்னத்தை, மேலும் 2 ஓ.பன்னீர் செல்வம்களும் கேட்டதால் குழப்பமானது. இதையடுத்து குலுக்கல் முறையில் வாளி சின்னம், வாகைக்குளம் ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஒதுக்கினார் தேர்தல் அதிகாரி. முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ்ஸுக்கு பலாப்பழம் சின்னம் வழங்கப்பட்டது.


வேலூர் லோக்சபா தேர்தலில் போட்டியிடும் நடிகர் மன்சூர் அலிகானுக்கும் இதேபோல பலாப்பழம் சின்னமே வழங்கப்பட்டது. சும்மாவே அதகளம் செய்வார் மன்சூர் அலிகான்.. இப்போது பலாப்பழம் சின்னம் கிடைத்திருப்பதால் பலாப்பழ கடையைப் போட்டு கலக்குவாரா என்ற பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.