இந்தியா ஆவலோடு எதிர்பார்த்து வந்த லோக்சபா தேர்தல் தேதி.. நாளை மாலை அறிவிப்பு!

Su.tha Arivalagan
Mar 15, 2024,07:51 PM IST

டெல்லி:  இந்தியா மொத்தமும் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கும் லோக்சபா தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் நாளை மாலை அறிவிக்கவுள்ளது.


இந்தியாவில் இது தேர்தல் திருவிழா காலம். தேர்தல் வந்தால்தான் மக்கள் அதிகாரம் படைத்தவர்களாக மாறுகிறார்கள். தங்களுக்குக் கிடைத்துள்ள ஜனநாயக உரிமையை, தங்களது அதிகாரத்தைப் பயன்படுத்தி தங்களை ஆளுவோரை மக்கள் தேர்ந்தெடுக்கும் திருவிழா இது.




உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு என்ற பெருமையைக் கொண்ட இந்தியாவில் மக்களவைக்கு நடைபெறும் தேர்தல் மிகப் பெரியது. உலகிலேயே இல்லாத அளவுக்கு மிகப் பெரிய தேர்தலும் கூட. இந்தத் தேர்தலுக்கான தேதியை நாளை தேர்தல் ஆணையம் அறிவிக்கவுள்ளது.


தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், தேர்தல் ஆணையர்கள் ஞானேஷ் குமார், சுக்பீர் சிங் சந்து ஆகியோர் நாளை செய்தியாளர்களைச் சந்திக்கவுள்ளனர். அப்போது லோக்சபா தேர்தல் தேதி, சில மாநில சட்டசபைத் தேர்தல் தேதிகளை அறிவிக்கவுள்ளனர்.


முன்னதாக இன்று 3 ஆணையர்களும் கூடி முக்கிய ஆலோசனை நடத்தினர். தேர்தல் ஆணையர்கள் இருவரும் இப்போதுதான் பதவியேற்றுள்ளனர் என்பதால் அவர்களுக்கு தலைமைத் தேர்தல் ஆணையர் பல்வேறு நடைமுறைகள் குறித்து விளக்கிக் கூறினார். இதையடுத்து நாளை செய்தியாளர்கள் கூட்டத்திற்கு தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது.