மும்பை விமான நிலையத்தில் அதிர்ச்சி..  சக்கர நாற்காலி பற்றாக்குறையால் உயிரிழந்த முதியவர்!

Meenakshi
Feb 16, 2024,05:46 PM IST

மும்பை: மும்பை விமான நிலையத்தில் சக்கர நாற்காலி தட்டுப்பாடு காரணமாக நடந்து சென்ற 80 வயது முதியவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.


நியூயார்க்கில் இருந்து தனது மனைவியுடன் இந்தியா வந்துள்ளார் ஒரு முதியவர். இவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். நியூயார்க்கில் இருந்து ஏர் இந்தியா விமானம் மூலமாக, மும்பையில் உள்ள தனது மகள் வீட்டிற்கு வந்துள்ளார். நியூயார்க்கில் இருந்து தனது மனைவியுடன் மும்பைக்கு வரும்முன்பே இரண்டு இரு சக்கர நாற்காலிகளை முன் பதிவு செய்துள்ளார். 




மும்பை வந்து சேர்ந்த பிறகு 2 சக்கர நாற்காலி கிடைக்கவில்லை. வீல்சேருக்குப் பற்றாக்குறை இருப்பதாக கூறி ஒன்றை மட்டுமே ஏர் இந்தியா நிறுவனம் அளித்துள்ளது. இதையடுத்து அதில், தனது மனைவியை அமர வைத்துக்கொண்டு அவரைப் பின் தொடர்ந்து சென்றார் அந்த முதியவர். கிட்டத்தட்ட ஒன்றரை கிலோமீட்டர் தூரம் அவர் நடந்து வந்துள்ளார். அபொழுது, அவர் திடீரென நிலைகுலைந்து  கீழே விழுந்தார். 


அருகில் இருந்தவர்கள் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக வீட்டுக்கு செல்லாமல் அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு கூறினர். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். 


இது குறித்து மும்பை விமானநிலையத்தைச் சேர்ந்த ஊழியர் ஒருவர் கூறுகையில், சக்கர நாற்காலி பற்றாக்குறை காரணமாக அவர்களுள் ஒருவருக்கு மட்டுமே சக்கர நாற்காலி வழங்கப்பட்டது. மனைவி சக்கர நாற்காலியில் அமர்ந்து கொள்ள, அவரைத் தொடர்ந்து நடந்து செல்ல கணவர் முடிவு செய்தார். கிட்டத்தட்ட 1.5 கிலோமீட்டர் நடந்த அவர் இமிகிரேஷன் பகுதியை அடைந்தார். அங்கு சென்றதும் அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி சரிந்தார். உடனே விமான நிலைய மருத்துவ கூடத்திற்கு கொண்டு செல்லப்பட்ட அவர், பின்னர் நானாவதி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் என்று தெரிவித்துள்ளார்.


மும்பை விமான நிலையத்தில் 80 வயது பயணி நடக்க விடப்பட்டு மரணமடைந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.