வருகிறது எல் நினோ.. உலகம் முழுவதும் வெப்ப நிலை உயரும்.. இந்தியாவும் பாதிக்கப்படும்

Su.tha Arivalagan
May 04, 2023,10:51 AM IST
டெல்லி: ஜூலை மாத வாக்கில் எல் நினோ அலைத் தாக்குதல் ஏற்படும் என்று ஐ.நா.வின் உலக வானிலைக் கழகம் எச்சரித்துள்ளது. இது சர்வதேச அளவில் வெப்பநிலை அதிகரிப்பை ஏற்படுத்தும். பருவ காலங்கள் மாறுபடும். உணவு உற்பத்திக்குப் பாதிப்பு வரும் என்றும் அது தெரிவித்துள்ளது.

எல் நினோ சூழலால் இந்தியாவிலும் பருவ மழை பாதிப்பு ஏற்படும் என்று இந்திய வானிலை ஆய்வாளர்களும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். வரும் ஜூலை மாதத்திலிருந்தோ அல்லது அதற்கு முன்போ கூட இந்த பருவ கால மாற்றங்கள் ஏற்படத் தொடங்கும்.



வெப்ப நிலை வழக்கத்தை விட அதிகமாக இருக்கும் என்பதால் குடிநீர்ப் பற்றாக்குறை, வறட்சி, வெப்ப அலைத் தாக்குதல் உள்ளிட்டவற்றை நாம் சந்திக்க நேரிடலாம். சில பகுதிகளில் அதீத வறட்சிக்கும் வாய்ப்பிருப்பதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஜூலை மாத கடைசியில் எல் நினோ உருவாக 80 சதவீத வாய்ப்புகள் இருப்பதாகவும், அதை விட்டால் செப்டம்பரில் வருவதற்கு 80 சதவீத வாய்ப்பிருப்பதாகவும் உலக வானிலைக் கழகம் கூறியுள்ளது.   இதுகுறித்து அதன் தலைவர் வில்பிரான் மோபோமா கூறுகையில், உலக அளவில் காலநிலைகளையும், வானிலையையும் இது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றார்.

இந்தியாவைப் பொறுத்தவரை வட கிழக்குப் பருவ மழை மற்றும் தென் மேற்குப் பருவ மழை ஆகிய இரு பருவ மழைகள்தான் உணவு உற்பத்திக்கு முக்கியமானவை. அதிலும் வட கிழக்குப் பருவ மழைதான் இந்தியா முழுமையும் விவசாயத்திற்கு மிக முக்கிமயானது. இந்த மழைக்காலத்தில் பாதிப்பு ஏற்பட்டால் அது உணவு உற்பத்தியை கடுமையாக பாதிக்கும் என்பதால் எல் நினோ என்ன மாதிரியான தாக்கத்தை இந்தியாவின் பருவ காலத்தில் ஏற்படுத்தப் போகிறது என்பது முக்கியமானது.

ஏற்கனவே இந்தியாவின் பல பகுதிகளில் வறட்சி  தாண்டவமாடுகிறது. நேற்று கூட மகாராஷ்டிர மாநிலத்தில் கிணறுகள் வற்றி, ஊர் மக்கள் தொலை தூரங்களுக்குப் போய் தண்ணீர் எடுத்து வரும் செய்திகள் வெளியாகின. இப்படிப்பட்ட நிலையில் எல் நினோவும் சேர்ந்து கொண்டால் நிச்சயம் நிலைமை மோசமாகும் என்பதில் சந்தேகமில்லை. இருப்பினும் குடிநீர் ஆதாரங்களைக் காத்தும்,  ஏரிகள், குளங்களை பாதுகாப்பது போன்ற நடவடிக்கைகளை எடுத்து வந்தால் பாதிப்பை ஓரளவு சமாளிக்கலாம்.