ஏக்கம் (ஒரு பக்க சிறுகதை)
- எழுத்தாளர் இரா. கலைச்செல்வி
காலையில் ஏழு மணிக்கு, பழைய கஞ்சியை, தூக்கு வாளியில் எடுத்து கொண்டு ,குழந்தை செந்திலையும் தூக்கிக்கொண்டு, வயலுக்கு, நாற்று நட போன சரசு, வீடு திரும்பிய போது, மணி மாலை ஐந்து.
வந்ததும், வராததுமாய், குழந்தையை திண்ணையில் விட்டுவிட்டு, வீட்டைப் பெருக்கி விட்டு, அடுப்பைப் பற்ற வைத்து, கொதிக்கும் உலையில், ரேஷன் அரிசியை கலைந்து போட்டாள்.
திண்ணையில் விட்ட, மகன் செந்தில் அழும் குரல் கேட்டது. இருடா செல்லம் .... ஆத்தா வந்துடுறேன். இந்த வெண்டைக்காய நறுக்கி வைச்சுட்டு வந்துர்றேன் எனக்கூறிவிட்டு வெண்டைக்காயை அலசினாள்.
செந்திலின் சத்தம் நின்று போகவே, பதறிப்போய் திண்ணைக்கு ஓடிளாள் சரசு.
செந்திலை காணோம். வெளியே வந்தபோது, சற்று தூரத்தில், செந்தில் தவழ்ந்து போய், எதையோ வேடிக்கை பார்ப்பது தெரிந்தது.
அருகில் போனாள். அங்கே வெள்ளாடு ஒன்று, தனது குட்டிக்கு பால் கொடுத்துக் கொண்டிருந்தது. அதைதான் செந்தில் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான்.
பசியில், அந்த ஏக்கத்தில், செந்தில் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது.
நானும் தான், எங்க ஆத்தாகிட்ட சப்பிச் சப்பி குடிக்கிறேன். ஒன்னுமே வரமாட்டேங்குது. இந்த ஆட்டுக் குட்டி மட்டும், எப்படி மடக்கு மடக்குனு குடிக்குது. எனக்கு வயிறு பசிக்குதே..!!! .நம்மளும் ஆட்டுக்குட்டியா பிறந்திருந்தால் ... நல்லா பால் குடிக்கலாமோ? செந்தில் கண்களில் ஏக்கம் தெரிந்தது.
ஏக்கத்தோடு ஆட்டுக்குட்டியை பார்த்துக், கொண்டிருந்த மகன் செந்திலை, அப்படியே வாரி அணைத்து, உச்சி முகர்ந்து, பால் கொடுக்க உட்கார்ந்தாள்.
சரசுவிற்கு கண்ணீர் மல மலவென கொட்டியது. அந்த மனுஷன், இன்னும் அரை மணி நேரத்துல வந்துருவானே...!! அதுக்குள்ள குழம்பு வைக்கணுமே. இல்லாட்டி கன்னாபின்னான்னு கத்துவான். ஒரு நாள் கூட குடிக்காம வரமாட்டானே. . அவன் அடிக்கிற அடியை தாங்கற சக்தி இந்த உடம்புக்கு இல்லை. அவன் பேசற பேச்சை கேட்கிற சக்தி இந்த மனசுக்கும் இல்லை. என பலவாறு பயத்தோடு சிந்தித்துக்கொண்டிருந்தாள் சரசு.
இப்படி பயந்துகொண்டே பால் கொடுத்தால், எங்கே இருந்து பால் வரும்..
செந்தில் வெறுமனே ஆத்தாவின் மார்பகத் தோலை , அவள் உடம்பின் வியர்வை உப்பினை, பால் என நினைத்து, வெறுமனே சப்பிக் கொண்டிருந்தான்.
(எழுத்தாளர் பற்றி... சிவகங்கையைச் சேர்ந்த எழுத்தாளர் இரா. கலைச்செல்வி, சென்னையில் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தில் பல்வேறு துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற அரசு உயர் அதிகாரி ஆவார். கணவர் மத்திய அரசில் பணியாற்றி ஓய்வு பெற்ற மூத்த விஞ்ஞானி. எழுத்தின் மீதும், வாசிப்பின் மீதும் தீராக் காதல் கொண்ட எழுத்தாளர் இரா. கலைச்செல்வி, நீண்ட காலமாக எழுதி வருகிறார். அகில இந்திய வானொலியில் இவரது பல கதைகள் ஒலிபரப்பாகியுள்ளன. சொந்தக் குரலிலேயே தனது கதைகளை அவர் வாசித்துள்ளார். நிலாமுற்றம் உள்ளிட்ட பல நிகழ்வுகளிலும் அவர் பங்கெடுத்துள்ளார். அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் அதிக அளவில் எழுதி வருகிறார். கதைகள் தவிர, கவிதைகளையும் அதிகம் எழுதி வருபவர், யோகா உள்ளிட்ட பல்வேறு கலைகளையும் கற்றுத் தெளிந்தவர். உளவியலில் முதுகலைப் பட்டமும் பெற்றவர்)
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்