அதிமுகவை தவெக தலைவர் விஜய் விமர்சிக்காதது ஏன் தெரியுமா?.. எடப்பாடி பழனிசாமி பலே விளக்கம்!
சென்னை: த.வெ.க. மாநாட்டில் விஜய், அதிமுக பற்றி எதுவும் பேசவில்லை என்றால் அதிமுக சிறப்பாக செயல்படுகிறது என்று அர்த்தம். அதிமுக வாக்குகளை எந்த சூழலிலும் விஜயால் ஈர்க்க முடியாது என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழக கட்சித் தலைவர் விஜய், கடந்த 27ம் தேதி விக்கிரவாண்டி வி.சாலையில் பிரம்மாண்ட மாநாட்டை நடத்தினார். அந்த மாநாடு குறித்தும், அவர் பேசிய பேச்சும் தான் தற்போது பேசு பொருளாக உள்ளது. தவெக தலைவர் விஜய் பேசியதற்கு பல்வேறு கட்சித் தலைவர்கள் தங்களது கருத்துக்களை தெரிந்து வருகின்றனர்.
அதேபோல, தமிழக வெற்றிக் கழக மாநாட்டில், திமுக மற்றும் பாஜக கட்சிகளை விமர்சித்த விஜய் அதிமுகவையும் காங்கிரசையும் ஏன் விமர்சிக்கவில்லை. இதனால், விஜய் அதிமுக, காங்கிரஸ்சுடன் கூட்டணி வைக்க வாய்ப்புக்கள் இருப்பதாகவும் வியூகக் கருத்துக்கள் வலம் வருகிறது.
இந்த நிலையில், தவெக மாநாட்டில் விஜய்யின் பேச்சு குறித்தும், அக்கட்சியுடன் அதிமுக கூட்டணி வைக்குமா? என்ற கேள்விக்கும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பதில் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறியதாவது:
தமிழக வெற்றி கழகத்தின் மாநில மாநாட்டை சகோதரர் விஜய் விக்ரவாண்டியில் நடத்தியுள்ளார். தமிழகத்தில் ஒவ்வொரு கட்சியும் மாநாடு நடத்துவது வழக்கம். அதைத்தான் விஜய்யும் செய்துள்ளார். ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு கொள்கை உண்டு. தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகள் உள்ளன. சூழலுக்கு ஏற்றவாறு கூட்டணி முடிவு எடுக்கப்படும். அதிமுக சிறப்பாக செயல்பட்டதால் எங்களை விஜய் விமர்சிக்கவில்லை. அவரது கட்சியின் கருத்துக்களை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
ஒரு கட்சியின் தலைவராக என்னென்ன செய்யப்போகிறார் என விளக்கி இருக்கிறார். அதை போய் சரியா? தவறா? என சொல்ல முடியாது.
திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு கொள்கையே கிடையாது. ஒரே கொள்கையுடைய கட்சிகளாக கூட்டணி அமைத்துள்ளோம் என்று முதல்வர் கூறியுள்ளார். பிறகு ஏன் தனித்தனியாக செயல்பட வேண்டும். அனைவரும் ஒரே கட்சியாக செயல்படலாமே. திமுகவுக்கும் பாஜகவுக்கும் மறைமுக உறவு உள்ளது. தற்போது அனைத்து கட்சிகளும் இந்த கருத்தை தெரிவித்து வருகின்றன.
விஜய் கட்சி தொடங்கியுள்ளதால் அதிமுகவுக்கு எந்த பாதிப்பும் கிடையாது. அதிமுக வாக்குகளை அவரால் ஈர்க்கவும் முடியாது. அதிமுக பொன் விழா கண்ட கட்சி. 30 வருட காலம் ஆட்சி புரிந்த கட்சி. ஆகவே தவெக கட்சியால் அதிமுகவை எதுவும் செய்ய முடியாது.
விஜய் துணை முதல்வர் பதவி கேட்டு கூட்டணிக்கு வந்தால் ஏற்றுக் கொள்வீர்களா? என்ற கற்பனையான கேள்விகளுக்கு எல்லாம் எப்படி பதில் சொல்ல முடியும். ஊடகங்களில் பரபரப்பான செய்திக்காக இப்படி கேள்விகளை போட்டு கொடுத்து வாங்குகிறீர்கள். அண்ணா திமுகவுக்காக எங்கள் தலைவர்கள் வகுத்த கொள்கையில், நாங்கள் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறோம். கூட்டணி என்பது தேர்தல் நேரத்தில் அரசியல் சூழ்நிலைக்கு தக்கவாறு அமைப்பது தான்.
எம்ஜிஆரைப் புகழ்ந்து விஜய் பேசியுள்ளார். அந்த அளவுக்கு எம்ஜிஆர் தமிழகத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு சென்றுள்ளார். அதனால்தான் அவரைப் புகழ்ந்துள்ளார். அதிமுகவை அவர் விமர்சிக்கவில்லை என்றால் நாங்கள் சிறப்பாக செயல்படுகிறோம் என்று அர்த்தம் என்றார் எடப்பாடி பழனிச்சாமி.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்