உயர்நீதிமன்ற தீர்ப்பு எதிரொலி.. அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு!
Mar 28, 2023,10:45 AM IST
சென்னை: சென்னை உயர்நீதிமன்றத் தடை நீங்கியதைத் தொடர்ந்து அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அதிமுகவின் விதிகளில் மாற்றம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி நியமிக்கப்பட்டிருந்தார். மேலும் மார்ச் 26ம் தேதி அவரை பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கும் வகையில் தேர்தலும் அறிவிக்கப்பட்டது.
இதற்கான மனுத்தாக்கல் செய்ய மார்ச் 19ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. கடைசி நாளான அன்று எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் மட்டுமே மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதனால் அவர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் தொடர்பான வழக்கின் தீர்ப்பு இன்னும் வெளியாகாத நிலையில் தேர்தலை நடத்தக் கூடாது என்று ஓபிஎஸ் தரப்பு உயர்நீதிமன்றத்தில் முறையிட்டது. இதை விசாரித்த நீதிமன்றம், பொதுச் செயலாளர் தேர்தலை நடத்தலாம். அதேசமயம், அந்த வழக்கின் தீர்ப்பு வெளியாகும் வரை முடிவை அறிவிக்க தடை விதித்திருந்தது.
இந்த நிலையில் அதிமுக பொதுக்குழு தீர்மான வழக்கில் இன்று நீதிபதி குமரேஷ்பாபு தீர்ப்பளித்தார். அதில் ஓபிஎஸ் தரப்பு தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.. மேலும் பொதுச் செயலாளர் தேர்தலை நடத்த இருந்த தடையையும் நீக்கி உத்தரவிட்டார்.
இதையடுத்து பொதுச் செயலாளர் தேர்தல் முடிவை உடனடியாக கட்சித் தலைமை அறிவித்தது. தேர்தலை நடத்திய நத்தம் விஸ்வநாதன், எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாக அறிவித்து அதற்கான சான்றிதழையும் அவரிடம் அளித்தார். மிகப் பெரிய அளவில் கூடியிருந்த அதிமுக நிர்வாகிகள் கைத தட்டியும், உற்சாக குரல் எழுப்பியும் வரவேற்றனர்.