புலிகேசி நகரில் "எடப்பாடி எம்ஜிஆருக்கு மாரல் வெற்றி".. கிடைத்தது இரட்டை இலை!

Su.tha Arivalagan
Apr 20, 2023,02:20 PM IST
பெங்களூரு: கர்நாடக மாநில சட்டசபைத் தேர்தலில் பெங்களூரு புலிகேசி நகரில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் அன்பரசனுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் ஓ.பி.எஸ்ஸை மீண்டும் ஒருமுறை தோற்கடித்துள்ளார் எடப்பாடி பழனிச்சாமி.

இது அதிமுகவுக்கும், அதன் சின்னத்துக்கும் கிடைத்துள்ள தார்மீக வெற்றியாகவும் பார்க்கப்படுகிறது. அதிமுகவுக்கு யார் தலைமை என்ற விவகாரத்தில் பல்வேறு கட்ட சட்டப் போராட்டங்களுக்குப் பின்னர் எடப்பாடி பழனிச்சாமி வசம் அதிமுக வந்தது. இதைத் தொடர்ந்து அவர் கட்சியின் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.



இந்த நிலையில் அவர் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் நடைபெறும் முதல் தேர்தலாக கர்நாடக சட்டசபைத் தேர்தல் வந்துள்ளது. இங்கு முதலில் பாஜகவுக்கு ஆதரவு தெரிவிக்கப் போவதாகவும், தேர்தலில் போட்டியிட மாட்டோம் என்றும் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார். ஆனால் தற்போது அதிரடியாக தனது முடிவை மாற்றிக் கொண்டு வேட்பாளராக அன்பரசனை அறிவித்தார் எடப்பாடி பழனிச்சாமி.

இதற்குக் காரணம் உண்டு. காரணம், புலிகேசி நகரில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வேட்பாளரை அறிவித்ததால், அவர்களுக்கு இரட்டை இலை சின்னம் கிடைத்தாலும் கிடைத்து விடும் என்ற சூழல் ஏற்பட்டது. இதைத் தடுக்கவும், தாங்களே அதிகாரப்பூர்வமான அதிமுக என்பதை நிரூபிக்கும் வகையிலும்தான் அங்கு வேட்பாளரை அறிவித்தார் எடப்பாடி.

அவரது கணக்கு தற்போது சரியாகி விட்டது. எடப்பாடி பழனிச்சாமி தரப்பு அறிவித்த அன்பரசனுக்கே இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் அதிமுகவுக்கு தானே தலைமை என்பதை மீண்டும் ஒருமுறை சட்டப்பூர்வமாக நிரூபித்து விட்டார் எடப்பாடி பழனிச்சாமி. தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவு, ஓ.பிஎஸ்ஸுக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.