செந்தில் பாலாஜியை வெளிய விடவே கூடாது... அடம்பிடிக்கும் அமலாக்கத்துறை... ஜாமீன் தீர்ப்பு ஒத்திவைப்பு

Aadmika
Aug 12, 2024,06:40 PM IST

டில்லி :  முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மீதான அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், அவருக்கு ஜாமின் வழங்க அமலாக்கத்துறை தொடர்ந்து கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில் இவ்வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்துள்ளது.


திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பண மோசடி வழக்கில் அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டு கடந்த ஓராண்டாக தொடர்ந்து சிறையில் இருந்து வருகிறார். உடல்நிலையை காரணம் காட்டி செந்தில் பாலாஜிக்கு பலமுறை ஜாமின் கேட்கப்பட்டது. ஆனால் இதுவரை அவருக்கு ஜாமின் கிடைக்கவில்லை. சென்னை ஐகோர்ட்டில் ஜாமின் கிடைக்காததால் சுப்ரீம் கோர்ட்டில் இது தொடர்பாக மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணையும் பல நாட்களாக நடந்து வருகிறது. காரணம் அமலாக்கத்துறை தொடர்ந்து வாய்தா வாங்கி வருகிறது.




செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு மீதான வழக்கை விசாரித்த நீதிபதிகள், விசாரணை எப்போது நிறைவடையும் என அமலாக்கத்துறைக்கு கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அமலாக்கத்துறை, வழக்கு விசாரணை தாமதமாவதற்கு தமிழக அரசே காரணம். செந்தில் பாலாஜியுடன் தமிழக அரசு நெருங்கிய தொடர்பு வைத்துள்ளது. அவருக்கு ஜாமின் வழங்கினால் சாட்சிகளுக்கு ஆபத்து என தெரிவிக்கப்பட்டது. 


15 மாதங்களாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜிக்கு டில்லி அமைச்சர் மணீஷ் சிசோடியா வழக்கின் தீர்ப்பு பொருந்தும். மனுதாரரான செந்தில் பாலாஜி முன்னாள் அமைச்சர். 5 முறை சட்டசபை உறுப்பினராக இருந்தவர். அவர் எங்கும் தப்பிச் செல்ல மாட்டார். எனவே ஜாமின் வழங்க வேண்டும் என செந்தில் பாலாஜி தரப்பில் வாதிடப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு மீதான தீர்ப்பினை தேதி குறிப்பிடாமல் சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்துள்ளது. 


செந்தில் பாலாஜிக்கு அவர் கைது செய்யப்பட்ட சமயத்திலேயே இதயத்தில் பாதிப்பு ஏற்பட்டு, மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக சொல்லப்பட்டது. அதற்கு பிறகு பல முறை அவர் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு விட்டார். சமீபத்தில் கூட அவருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதால் அவர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்