மு.க.ஸ்டாலின் பெங்களூர் செல்லும் நாளில்.. பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு!
சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக பெங்களூரு செல்லும் நாளான இன்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீடு மற்றும் அவருக்குத் தொடர்பான இடங்களில் அமலாக்கத்துறையினர் ரெய்டு நடத்தி வருகின்றனர்.
சமீப காலமாக தமிழ்நாட்டில் அமலாக்கத்துறை மிகவும் தீவிரமாக செயல்படத் தொடங்கியுள்ளது. அடுத்தடுத்து ரெய்டுகளில் ஈடுபட்டு வருகின்றனர். வருமான வரித்துறையும் அவ்வப்போது ரெய்டு நடத்தி வருகிறது.
சமீபத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி வீடுகளில் ரெய்டுகள் நடத்தப்பட்டன. அதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்டதும் அவருக்கு நெஞ்சு வலி வரவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது தனியார் மருத்துவமனையில் அவருக்கு இருதய பைபாஸ் அறுவைச் சிகிச்சை முடிந்து தொடர்ந்து அங்கேயே உள்ளார்.
இந்த நிலையில் அடுத்த அமைச்சர் பக்கம் திரும்பியுள்ளது அமலாக்கத்துறை. உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடியின் சென்னை வீடு , விழுப்புரம் வீடு உள்ளிட்ட அவருக்குத் தொடர்பான 9 இடங்களில் இன்று காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் ரெய்டு நடத்தி வருகின்றனர். செம்மண் குவாரி தொடர்பான வழக்கு தொடர்பாக இந்த ரெய்டு நடப்பதாக கூறப்படுகிறது. இந்த வழக்கு கடந்த 2012ம் ஆண்டு தொடரப்பட்டதாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
யார் இந்த பொன்முடி?
கடந்த கருணாநிதி கால அமைச்சரவையில் போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு முக்கியத் துறைகளை வகித்த மூத்த அமைச்சர்தான் பொன்முடி. விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். மூத்த திமுக தலைவர்களில் ஒருவர். தற்போதைய ஸ்டாலின் அமைச்சரவையில் உயர் கல்வித்துறை அமைச்சராக இருக்கிறார். இவரது மகன் கவுதம சிகாமணி எம்.பியாக இருக்கிறார்.
அமைச்சர் பொன்முடிக்கும் ஆளுநர் ஆர். என். ரவிக்கும் இடையே பல்கலைக்கழக விவகாரங்கள் தொடர்பாக அவ்வப்போது சர்ச்சை வெடிக்கும். சமீபத்தில் கூட பட்டமளிப்பு விழா தொடர்பாக ஆளுநர் மிகவும் தாமதம் செய்கிறார் என்பது உள்ளிட்ட புகார்களைக் கூறியிருந்தார் பொன்முடி. மேலும் ஆளுநர் ரவி கலந்து கொண்ட பெரியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவையும் அவர் புறக்கணித்தார் என்பது நினைவிருக்கலாம்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக பெங்களூர் செல்கிறார். அவர் செல்லும் நாளில் முக்கிய அமைச்சர் ஒருவரது இருப்பிடங்கள் அமலாக்கத்துறையின் ரெய்டுக்குள்ளாகியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.