வேணும்னே ஸ்வீட் சாப்பிடுகிறார் கெஜ்ரிவால்.. ஜாமீன் பெற நூதன உத்தி.. அமலாக்கத்துறை பரபர தகவல்!
டெல்லி: தனக்கு சுகர் இருந்தும் கூட வேண்டும் என்றே அதிக அளவில் இனிப்புகளையும், மாம்பழத்தையும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சாப்பிடுவதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது. இப்படி சாப்பிடுவதன் மூலம் சர்க்கரை அளவு அதிகரிக்கும், அதைக் காரணம் காட்டி ஜாமீன் பெறலாம் என்று கெஜ்ரிவால் திட்டமிடுவதாகவும் அமலாக்கத்துறை கூறியுள்ளது.
மதுக் கொள்கை ஊழல் என்ற வழக்கில் அமலாக்கத்துறையினரால், கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் தற்போது தனது ரெகுலர் டாக்டருடன் மருத்துவ ஆலோசனை பெற அனுமதி கோரி டெல்லி ரோஸ் அவென்யூ கோர்ட்டில் மனு செய்துள்ளார். இந்த மனுவுக்கு அமலாக்கத்துறை ஆட்சேபனை தெரிவித்து பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
அதில் கெஜ்ரிவாலுக்கு ஏற்கனவே டயபடிஸ் பிரச்சினை உள்ளது. அப்படி இருந்தும் கூட அவர் சிறையில் அதிக அளவில் இனிப்புகளை வாங்கிச் சாப்பிடுகிறார். அதிக அளவில் மாம்பழமும் சாப்பிடுகிறார். வேண்டும் என்றே அதிக அளவில் அவர் சாப்பிடுகிறார். இதன் மூலம், உடல் நலம் பாதிக்கப்படும், அதை வைத்து ஜாமீன் பெறலாம் என்பது அவரது திட்டமாகும். சர்க்கரை வியாதியஸ்தர்கள் எதையெல்லாம் சாப்பிடக் கூடாதோ, அதையெல்லாம் கெஜ்ரிவால் சாப்பிடுகிறார் என்று அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
அதற்குப் பதில் அளித்த கெஜ்ரிவால் தரப்பு வழக்கறிஞர் வாதிடுகையில், கெஜ்ரிவாலின் மருத்துவர் என்ன பரிந்துரைத்தாரோ அதைத்தான் கெஜ்ரிவால் சாப்பிடுகிறார். கெஜ்ரிவாலுக்கு வீட்டிலிருந்து சாப்பாடு வருவதைத் தடுக்கும் நோக்கில் அமலாக்கத்துறை இதுபோல சொல்கிறது. இதனால் டெல்லி முதல்வரின் உடல் நலம் குறித்து எங்களுக்குக் கவலையாக உள்ளது என்று தெரிவித்தார்.
இதுகுறித்து சிறை அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டுள்ளது கோர்ட். இதுதொடர்பான மேல் விசாரணை வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.