இங்கிலாந்தின் பெரும் தொழிலதிபர்.. காலின் ஆம்ஸ்ட்ராங்.. ஈக்வடாரில் கடத்தப்பட்டார்!

Su.tha Arivalagan
Dec 20, 2023,04:51 PM IST

- மஞ்சுளா தேவி


க்விடோ, ஈக்வடார்:  ஈக்வடார் நாட்டின் லாஸ் ரியோஸ் மாகாணத்திலிருந்து, இங்கிலாந்து நாட்டின் மிகப் பெரிய தொழிலதிபரும், ஈக்வடார் நாட்டின் முன்னாள் கெளரவ தூதருமான காலின் ஆம்ஸ்ட்ராங், அவரது காதலி காத்தரின் பாவலோ சான்டோஸுடன் சேர்த்து கடத்தப்பட்டுள்ளார்.


காலின் ஆம்ஸ்ட்ராங் ஈக்வடாரில் உள்ள லாஸ் ரியோஸ் மாகாணத்தில் வசித்து வருகிறார். 78 வயதான இவர் ஒரு கோடீஸ்வரர். இவருக்கு சொந்தமான பண்ணையில் இருந்து சனிக்கிழமை அதிகாலை கடத்தப்பட்டதாக ஈக்வடார் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.  அவருடன், அவரது காதலியும் இருந்துள்ளார். போலீஸ் அதிகாரிகள் போல் மாறுவேடமிட்ட 15 பேர் காலின் ஆம்ஸ்ட்ராங்கை கடத்தியுள்ளதாக தெரிகிறது. 


தற்போது போலீஸார் காத்தரினை மீட்டுள்ளனர். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஆம்ஸ்டிராங்கின் சொத்தைப் பறிக்க இந்த கடத்தல் நடந்திருப்பதாக போலீஸார் சந்தேகிக்கின்றனர்.




காலின் ஆம்ஸ்டிராங்கை கடத்திய 15 பேரும் பழைய குற்றவாளிகள் என்று சொல்லப்படுகிறது. தென் அமெரிக்க நாடுகளின் மிக முக்கிய குற்றச் செயல் போதைப் பொருள் கும்பல்கள்தான். இந்த 15 பேரும் கூட போதைப் பொருள் கும்பலைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.


ஈக்வடார் நாட்டின் விவசாய நிறுவனமான அக்ரிபாக் நிறுவனத்தை நடத்தி வருகிறார் காலின் ஆம்ஸ்டிராங்.  இதுதவி டுப்கில் பார்க் எஸ்ட்டேட்டையும் அவர் வைத்துள்ளார். 


தனது தந்தை குறித்து ஆம்ஸ்டிராங்கின் மகளும் கூட கவலை கொண்டுள்ளார். அவர் குறித்த தகவல் தெரிந்தால் தெரிவிக்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.