அடுத்தடுத்து அதிரடி.. விடுதலைச் சிறுத்தைகளுக்கும் பானை சின்னம் தர மறுத்தது தேர்தல் ஆணையம்!

Su.tha Arivalagan
Mar 27, 2024,06:53 PM IST

டெல்லி: மதிமுகவுக்கு பம்பரம் கிடையாது, நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் கிடையாது, அவர்கள் கேட்ட சின்னமும் கிடையாது என்று கூறிய தேர்தல் ஆணையம் இப்போது விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கும் அவர்கள் கேட்ட பானை சின்னத்தை ஒதுக்க மறுத்து விட்டது.


அடுத்தடுத்து முக்கிய கட்சிகளுக்கு சின்னம் தொடர்பான முடிவில் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.


தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திமுக, அதிமுக, பாஜக தலைமையில் கூட்டணிகள் அமைந்துள்ளன. நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடுகிறது. அதிமுக கூட்டணியில் பெரிதாக சின்னம் பிரச்சினை எழவில்லை. பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கேட்ட சைக்கிள் சின்னம், டிடிவி தினகரன் கேட்ட குக்கர் சின்னம் என யாருக்கும் எந்தப் பிரச்சினையும் எழவில்லை. யாரெல்லாம் எந்த சின்னம் கேட்டார்களோ எல்லோருக்கும் டக் டக்கென்று சின்னம் கிடைத்து விட்டது.


இதில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி 3 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அது தேர்தலில் வெற்றி பெற்றே பல வருடங்கள் ஆகி விட்டது. வாக்கு வங்கியும் கூட அதலபாதாளத்தில் தான் உள்ளது. இருந்தாலும் அது கேட்ட சின்னம் பெரிய அளவில் பிரச்சினை இல்லாமல் கிடைத்து விட்டது. அமமுகவிடமும் கூட எம்எல்ஏவோ, எம்.பியோ யாரும் இல்லை. அதன் வாக்கு வங்கியும் கீழேதான் கிடக்கிறது. இருந்தாலும் அந்தக் கட்சிக்கும் கூட கேட்ட குக்கர் சின்னம் கிடைத்து விட்டது. 


நாம் தமிழர் கட்சி ஆரம்பத்திலிருந்தே கரும்பு விவசாயி சின்னத்தில்தான் போட்டியிட்டது. இந்த முறை அது மறுக்கப்பட்டு விட்டது. அதேபோல அவர்கள் கேட்ட சின்னத்தையும் தேர்தல் ஆணையம் தர மறுத்து விட்டது. 




திமுக பக்கம் திரும்பினால் மதிமுக கேட்ட பம்பரம் சின்னம் மறுக்கப்பட்டு விட்டது. இப்போது விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கும் அது கேட்ட பானைச் சின்னம் மறுக்கப்பட்டுள்ளது. மதிமுகவிடம்  தற்போது ஒரு எம்.பியும், 4 எம்எல்ஏக்களும் உள்ளனர். ஆனால் என்ன கொடுமை என்றால் அனைவருமே திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வென்றவர்கள்.  இந்த நிலையில் மதிமுகவுக்கு தற்போது அவர்களின் பம்பரம் சின்னம் மறுக்கப்பட்டுள்ளது.


மறுபக்கம், விடுதலைச் சிறுத்தைகள் வசம் தற்போது 4 எம்.எல்.ஏக்கள், 2 எம்.பிக்கள் உள்ளனர். இதில் நான்கு எம்எல்ஏக்களும், ஒரு எம்.பியும் பானை சின்னத்தில் போட்டியிட்டு வென்றவர்கள். ரவிக்குமார் மட்டும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வென்றவர். வருகிற மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் 2 தொகுதிகளில் போட்டியிடுகிறது விசிக. அதேபோல ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களிலும் அது போட்டியிடுகிறது. கிட்டத்தட்ட 20க்கும் மேற்பட்ட சட்டசபை மற்றும் மக்களவைத் தொகுதிகளில் போட்டியிடுகிறது விசிக.


இதனால் பானைச் சின்னத்தைக் கேட்டு அது விண்ணப்பித்திருந்தது. தற்போது அந்த கோரிக்கையை தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது. அடுத்தடுத்து முக்கிய கட்சிகளுக்கு சின்னம் மறுக்கப்பட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்டுத்தியுள்ளது.