ஹரியானா சட்டசபைத் தேர்தல் தேதி திடீர் மாற்றம்.. அக்டோபர் 1க்குப் பதில் 5ம் தேதி வாக்குப் பதிவு

Su.tha Arivalagan
Aug 31, 2024,06:47 PM IST

டெல்லி: ஹரியானா மாநில சட்டசபைத் தேர்தல் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அக்டோபர் 1ம் தேதிக்குப் பதில் 5ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.


ஹரியானா மாநில சட்டசபைக்கும், ஜம்மு காஷ்மீர் சட்டசபைக்கும் சமீபத்தில் தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி ஹரியானாவில் அக்டோபர் 1ம் தேதி வாக்குப் பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஜம்மு காஷ்மீர் சட்டசபைக்கு 3 கட்டமாக, செப்டம்பர் 18, செப்டம்பர் 25 மற்றும் அக்டோபர் 1ம் தேதி வாக்குப் பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.




வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 4ம் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது அதில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஹரியானா சட்டசபைத் தேர்தல் தேதியில் மட்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அக்டோபர் 1ம் தேதிக்குப் பதில் 5ம் தேதி வாக்குப் பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல ஹரியானா, ஜம்மு காஷ்மீர் வாக்கு எண்ணிக்கையும் 4ம் தேதிக்குப் பதில் 8ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.


பிஷ்னோய் சமூக மக்கள் வருடா வருடம் ஆசோஜ் அமாவாசை விழாவை வெகு விமரிசையாக கொண்டாடுவார்கள். இந்த முறை தேர்தல் தேதியையொட்டி அது வந்ததால் தேர்தலை தள்ளி வைக்க கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. அதை மதித்து தேர்தல் தேதி மாற்றப்படுவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்