கர்நாடக சட்டசபைக்கு மே 10ம் தேதி தேர்தல்.. ஆணையம் அறிவிப்பு

Su.tha Arivalagan
Mar 29, 2023,11:29 AM IST
 டெல்லி: கர்நாடக சட்டசபைக்கு தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் இன்று அறிவித்தது. அதன்படி மே 10ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. மே 13ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

கர்நாடக சட்டசபையின் ஆயுள் காலம் வருகிற மே 24ம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. இதையடுத்து அதற்குள் அங்கு தேர்தல் நடத்தப்பட வேண்டும். தேர்தலுக்கான முஸ்தீபுகளை ஏற்கனவே தேர்தல் ஆணையம் முடுக்கி விட்டிருந்தது. அரசியல் கட்சிகளும் கூட ஆயத்தமாகி வந்தன.



இந்த நிலையில் இன்று தேர்தல் தேதியை ஆணையம் அறிவித்தது. இதுகுறித்து தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தலைமையில் தேர்தல் ஆணையர்கள் டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்து தேர்தல் தேதியை அறிவித்தனர்.

அதன்படி கர்நாடக சட்டசபைக்கு மே 10ம் தேதி தேர்தல் நடைபெறும் என்றுஅறிவிக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 13ம் தேதி நடைபெற்று முடிவு அறிவிக்கப்படும்.

மனுத்தாக்கல்  - ஏப்ரல் 13
மனுத்தாக்கல் முடிவு - ஏப்ரல் 20
வேட்பு மனு பரிசீலனை - ஏப்ரல் 21
வேட்பு மனுக்களை திரும்பப் பெற கடைசி நாள் - ஏப்ரல் 24
வாக்குப் பதிவு - மே 10
வாக்கு எண்ணிக்கை - மே 13

கர்நாடக சட்டசபையில் 224 தொகுதிகள் உள்ளன.  இதில் 36 தனித் தொகுதிகள் அடங்கும்.