குட்டீஸ் பேவரைட்.. கலர்ஃபுல் தக்காளி தோசை எப்படி செய்யலாமுன்னு பார்ப்போமா?

vanitha
Feb 19, 2024,05:23 PM IST

ஒரு வழியா சண்டே முடிஞ்சாச்சு..  மண்டே வந்தாச்சு.. பெரும்பாலான வீடுகள்ல வார நாட்களில் சமையல் செய்றதுக்கு, சனி ஞாயிற்றுக்கிழமைகளிலேயே காய்கறிகள் வாங்கி வச்சுடுவாங்க. என்ன காய்கறி வாங்குறோமோ இல்லையோ முக்கியமா தக்காளி, வெங்காயம் கண்டிப்பா வாங்கிருவோம். சில விரத நாட்கள்ல பல பேர் வெங்காயம் பூண்டு சேர்க்காமல் சமைப்பாங்க. ஆனா தக்காளி இல்லாம சமையல் யோசிக்கவே முடியாதுங்க.. அவ்ளோ அருமையான விஷயங்கள் இருக்கு இந்த தக்காளில.


போனவருடம் தக்காளி விலை ராக்கெட் வேகத்தில் பறந்ததை யாரும் அவ்ளோ சீக்கிரம் மறக்க முடியாது. சிவப்பு தங்கம்னு பேர் வந்துருச்சு தக்காளிக்கு, தக்காளியில் ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் இருக்குங்க. அதிலும் விட்டமின் ஏ அதிகமாக உள்ளதால் கண் பார்வைக்கு மிகவும் நல்லது. விட்டமின் சி சரும பாதுகாப்பிற்கு உதவுகிறது. தக்காளிப் பழத்தில் விட்டமின் கே மற்றும் கால்சியம் சத்துக்கள் உள்ளதால் எலும்பை உறுதியாகவும் திடமாகவும் மாற்ற உதவுகிறது. 


சரிங்க என்னதான் இவ்வளவு நன்மைகள் ஒரு பக்கம் இருந்தாலும் சமையல்ல தக்காளி சேர்க்காட்டி டேஸ்ட்டும் நல்லா இருக்காது. அந்த டிஷ்ஸும் முழுமை பெறாது இல்லையா.. சரி தக்காளியை வைத்து இன்னைக்கு ஒரு தோசை வெரைட்டி தாங்க சொல்லப் போறேன். தக்காளி சட்னி தொட்டு சாப்பிட்டால் தோசைக்கு சூப்பரா இருக்கும். அது என்ன தக்காளி தோசைன்னு? நீங்க எல்லாம் நினைப்பீங்க. அட ஆமாங்க! ரொம்ப சிம்பிளா செய்யலாம், டேஸ்ட் அட்டகாசமா இருக்கும். சரிங்க அதை எப்படி பண்ணலாம்னு பார்ப்போங்க.




தக்காளி தோசை செய்ய தேவையான பொருட்கள்:


தக்காளி-4 

இட்லி மாவு- ஒரு கப்

பூண்டு -3 பல்

வரமிளகாய் -3

சீரகம் -1 ஸ்பூன்

ரவை -1 ஸ்பூன்

கடலை மாவு -1 ஸ்பூன்

அரிசி மாவு -1 ஸ்பூன்

கல்லுப்பு- சிறிதளவு

பெருங்காயத்தூள்- சிறிதளவு


செய்முறை: முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் நறுக்கிய தக்காளி, பூண்டு, வர மிளகாய், சீரகம், சிறிது கல் உப்பு சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். பின் அரைத்த தக்காளி கலவையை இட்லி மாவுடன் கலந்து கொள்ளவும். பின்னர் மாவில் ரவை ஒரு ஸ்பூன், கடலை மாவு ஒரு ஸ்பூன், அரிசி மாவு ஒரு ஸ்பூன், பெருங்காயத்தூள் சிறிதளவு சேர்த்து கலந்து பத்து நிமிடங்கள் ஊற விடவும். 10 நிமிடம் கழித்து அடுப்பில் தோசை கல்லை வைத்து சூடானதும் மெல்லிய  தோசைகளாக ஊற்றி எண்ணெய் ஊற்றி நன்கு வெந்ததும் எடுத்தால் மொறு மொறு தக்காளி தோசை தயார்.




அரிசி மாவு கடலை மாவு, ரவை மூன்றும் கலந்ததால் தோசை ரொம்ப கிரிஸ்பியா இருக்கும். கலரும் அட்ராக்டிவா இருப்பதால உங்க குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவாங்க.  இந்த தோசைக்கு தேங்காய் சட்னி நன்றாக இருக்கும். கண்டிப்பா ட்ரை பண்ணி பாருங்க! வித்தியாசமா இருக்கும்.


ஓகேங்க.. நெக்ஸ்ட் ரெசிபியோட மீட் பண்றேன்.. பை பை...!


புகைப்படம்: செளந்தரபாண்டியன்