ஊட்டி, கொடைக்கானல் போகப் போறீங்களா.. இ பாஸ் எடுத்தாச்சா??.. நாளை முதல் கட்டாயம்!
சென்னை: ஊட்டி, கொடைக்கானலுக்கு செல்ல நாளை முதல் இ பாஸ் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இ பாஸ் வழங்குவது இன்று முதல் தொடங்கியுள்ளது. இதற்கான பதிவு இன்று தொடங்கியது.
கோடை விடுமுறையை முன்னிட்டு ஊட்டி, கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் பெருமளவு வருவதாலும், இதனால் அங்கு வாகன பெருக்கத்தால் சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்படுவதாகவும், இபாஸ் நடைமுறை பிறப்பிக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து நீலகிரி மற்றும் திண்டுக்கல் ஆட்சியாளர்கள் இ-பாஸ் நடைமுறை மே 7 முதல் அமல்படுத்தப்படும் என ஏற்கனவே அறிவித்திருந்தனர்.
இந்த நிலையில் ஊட்டி கொடைக்கானலுக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகள் இ-பாஸ் பெறுவதற்கான பதிவு இன்று தொடங்கியுள்ளது. இந்த இ-பாஸ் பதிவு இன்று காலை 6 மணிக்கு தொடங்கி, ஜூன் 30 வரை அமலில் இருக்கும். இது குறித்து தமிழக அரசு சில விளக்கங்களை வெளியிட்டுள்ளது . அதில் கூறப்பட்டுள்ளதாவது:
ஊட்டி, கொடைக்கானலுக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகள் கட்டாயம் இ-பாஸ் பெற்றுக்கொண்டு வரவேண்டும். சுற்றுலா பயணிகள் மற்றும் வணிக ரீதியாக வருவோருக்கு வேறு எந்த கட்டுப்பாடும் இல்லை. விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ பாஸ் வழங்கப்படும்.
இ பாஸ் பெற எப்படி விண்ணப்பிப்பது:
வெளியூர் பயணிகள் தங்களின் மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம்.
உள்ளூர் சுற்றுலா பயணிகள் தங்களின் மொபைல் எண்களை பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.
கொடைக்கானல், ஊட்டிக்கு செல்பவர்கள் https://epass.tnega.org/home இணையதளம் வாயிலாக தங்களது சுய விவரங்கள், வாகனத்தின் எண்கள், தங்குமிடம், அங்கு எத்தனை நாள் இருப்பார்கள் போன்ற விவரங்களை பதிவு செய்து இ-பாஸ் பெறலாம் என அரசு அறிவித்துள்ளது.