Kaantha: எம்.ஆர். ராதா மாதிரி.. புதிய அவதாரத்தில் துல்கர் சல்மான்.. ராணாவுடன் இணைந்து தயாரிப்பு!
சென்னை: நடிகர் துல்கர் சல்மான் சினிமா துறைக்கு தடம் பதித்து 15 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், அதனை சிறப்பிக்கும் பொருட்டு காந்தா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு. இப்படத்தின் விசேஷம் என்னவென்றால் தெலுங்கு நடிகர் ராணா டகுபதியுடன் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறார் துல்கர் சல்மான்.
மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான். இவர் சினிமா துறைக்கு வந்து 15 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு செக்கண்டு சோவ் என்ற திரைப்படம் மூலம் அறிமுகமாகி 15 வருட சினிமா வாழ்க்கையில் தமிழ், மலையாளம் தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் முண்ணனி நடிகராக வலம் வருகிறார்.
பெங்களூரு டேஸ், கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், மகாநடி, ஓ காதல் கண்மணி, குரூப், உள்ளிட்ட பல்வேறு படங்களில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மனதை ஈர்த்துள்ளார். குறிப்பாக சமீபத்தில் வெளியான சீதாராம் மற்றும் லக்கி பாஸ்கர் தமிழ் மற்றும் தெலுங்கில் மாபெரும் வெற்றி கண்டுள்ளது. இப்படத்தின் வெற்றி உலகம் முழுவதும் பல்வேறு ரசிகர்கள் மத்தியில் பாராட்டப்பட்டு வருகிறது. இவர் மலையாள நடிகராக அறிமுகமானாலும் கூட தென்னிந்திய திரைப்படங்களில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறார். அந்தந்த மொழிகளில் தானே டப்பிங் பேசுவதும் துல்கரின் சிறப்பம்சமாகும்.
இந்த நிலையில் துல்கர் சல்மான் தற்போது காந்தா என்ற திரைப்படத்தில் கமிட்டாகி உள்ளார். இவர் திரைத்துறைக்கு வந்து 15 ஆண்டுகள் ஆனதை சிறப்பிக்கும் பொருட்டு, ராணா ரகுபதி மற்றும் துல்கர் சல்மான் இணைந்து தயாரிக்கும் காந்தா படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது பட குழு. இதனை தொடர்ந்து இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா பற்றிய அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியாகும் எனவும் அறிவித்துள்ளது.
இப்படத்தை செல்வமணி செல்வராஜ் இயக்குகிறார். இவர் ஏற்கனவே ஹண்ட் ஃபார் வீரப்பன் என்ற நெட்பிக்ஸ் ஓடிடி தொடரை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தை ரானா ரகுபதியின் ஸ்பிரிட் மீடியா மற்றும் துல்கர் சல்மானின் வோஃபேரர் பிலிம்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்க இருக்கிறது.
இப்படம் குறித்து இயக்குனர் செல்வமணி செல்வராஜ் கூறுகையில், நடிகர் துல்கர் சல்மானின் 13 வருட சினிமா பயணத்தை பெருமைப்படுத்தும் வகையில் 'காந்தா' படத்தின் முதல் பார்வையை ரசிகர்களுக்கு வழங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்த திரைப்படம், துல்கரின் சினிமா வாழ்க்கையைப் போலவே பல பரிணாமம், சவால் மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றின் பிரதிபலிப்பாக அமையும். இது நிச்சயம் அவருக்கான படமாக இருக்கும் என கூறியுள்ளார்.
காந்தா என்ற வார்த்தை தமிழ்நாட்டு ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமானது. அரிக்குதடி காந்தா என்று எம்.ஆர். ராதா பேசிய வசனத்தை யாராலும் மறந்திருக்க முடியாது. ரத்தக் கண்ணீர் என்ற பெயரில் முதலில் நாடகமாக வெற்றி பெற்று பின்னர் திரைப்படமாக மாறி அதிலும் மாபெரும் வெற்றியைப் பதித்தது. அதில் இடம் பெற்ற புகழ் பெற்ற வசனம்தான் இந்த அரிக்குதடி காந்தா. அந்த வசனத்தின் ஒரு பாதியை படத்தின் டைட்டிலாக வைத்துள்ள நிலையில், கிட்டத்தட்ட துல்கரின் லுக்கும் கூட எம்.ஆர். ராதா பாணியில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த காந்தாவும் வெல்லட்டும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்